May 7, 2026 - 07:04 PM -
0
வெலிசர இடைத்தங்கல் முகாமிலிருந்து தப்பியோடி, இணையம் ஊடாக சட்டவிரோத நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த 30 வெளிநாட்டவர்களை பொலிஸார் இன்று (07) கைது செய்துள்ளனர்.
பொரலஸ்கமுவ, 10ஆம் மைல்கல் பகுதியில் வாடகைக்கு எடுக்கப்பட்ட கட்டிடமொன்றில் தங்கியிருந்த போதே, கல்கிஸ்ஸை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் இவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் இரண்டு யுவதிகள் உட்பட 21 சீனர்கள் மற்றும் ஒரு யுவதி உட்பட 9 வியட்நாமியர்கள் அடங்குவதாக பொலிஸார் கூறினர்.
சந்தேக நபர்களிடமிருந்து 10 கணினிகள், 29 ஆப்பிள் வகை அலைபேசிகள் மற்றும் இணைய வசதிகளைப் பெறுவதற்கான உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேபோன்ற குற்றச்சாட்டின் கீழ் கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் 152 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள இந்த 30 பேரும் உள்ளடங்கியிருந்தனர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் வெலிசர இடைத்தங்கல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதே, அங்கிருந்து தப்பிச் சென்று மீண்டும் இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்ட நிலையில் இவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸ்ஸை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
பொரலஸ்கமுவ பகுதியில் உள்ள இருமாடிக் கட்டிடத்தின் மேல் தளத்தை மாதந்தோறும் 15 இலட்சம் ரூபாய் வாடகைக்கு எடுத்து, இவர்கள் இந்த மோசடியை முன்னெடுத்து வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் நடத்தப்பட்ட விசாரணையில், இவர்கள் சில நாட்களுக்கு முன்னரே இந்தப் பகுதிக்கு வந்துள்ளமை கண்டறியப்பட்டது.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் எவரிடமும் விசா அல்லது கடவுச்சீட்டுகள் இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
கல்கிஸ்ஸை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
