May 15, 2026 - 06:00 PM -
0
ஈரான் மீதான தனது பொறுமை குறைந்து வருவதாகவும், டெஹ்ரான் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறக்க வேண்டும் என்பதில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உடன்பட்டுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது சீனப் பயணத்திற்கு முன்னதாக, ஈரானிய எண்ணெயைக் கொள்முதல் செய்யும் சீன எண்ணெய் நிறுவனங்கள் மீது வொஷிங்டனால் விதிக்கப்பட்ட தடைகளை நீக்குவது குறித்து பரிசீலித்து வருவதாக டிரம்ப் பின்னர் குறிப்பிட்டார்.
எனினும், ஒருபோதும் தொடங்கியிருக்கக் கூடாத இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர பெய்ஜிங் தனது செல்வாக்கைப் பயன்படுத்துமா என்பது குறித்து அவரது கருத்துக்கள் தெளிவான அறிகுறி எதையும் வெளிப்படுத்தவில்லை.
ஈரான் போர், தைவான் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பெய்ஜிங்கில் ஷி ஜின்பிங்குடன் நடத்திய இரண்டாம் நாள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இன்று (15) கருத்து தெரிவித்த டிரம்ப், "மற்றவர்களால் தீர்க்க முடியாத பல பிரச்சினைகளை நாங்கள் தீர்த்துள்ளோம்" என்று கூறினார்.
ஈரான் குறித்த கலந்துரையாடல் பற்றி ஜனாதிபதி ஷி ஜின்பிங் நேரடியாக எதனையும் கூறவில்லை. எனினும், ஈரான் போர் குறித்த பெய்ஜிங்கின் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் சீன வெளியுறவு அமைச்சகம் கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. "இந்த மோதல் ஒருபோதும் நடந்திருக்கக் கூடாது, இது தொடர்வதற்கு எந்தக் காரணமும் இல்லை" என்று அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 28 அன்று தொடங்கிய அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பெரும்பாலான கப்பல் போக்குவரத்துக்காக ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இது உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முன்னெப்போதும் இல்லாத பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா கடந்த மாதம் ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்திய போதிலும், அந்நாட்டுத் துறைமுகங்கள் மீது முற்றுகையைத் தொடங்கியது. அமெரிக்கா தனது முற்றுகையை முடிவுக்குக் கொண்டு வரும் வரை நீரிணையைத் திறக்கப் போவதில்லை என்று டெஹ்ரான் தெரிவித்துள்ளது. ஈரான் உடன்படிக்கைக்கு வராவிட்டால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
"அவர்கள் அணு ஆயுதத்தை வைத்திருப்பதை நாங்கள் விரும்பவில்லை, நீரிணைகள் திறக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்," என ஷி ஜின்பிங்குடன் அமர்ந்திருந்த போது டிரம்ப் கூறினார்.
இதற்கிடையில், பேச்சுவார்த்தைகளைத் தொடர வொஷிங்டன் விரும்புவதாகத் தெரிவிக்கும் செய்திகள் தமக்குக் கிடைத்துள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார். ஆனால் அவர் இது குறித்து விரிவான விளக்கங்களை அளிக்கவில்லை.
அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் நோக்கம் தமக்கு இல்லை என்று ஈரான் மறுத்து வரும் அதேவேளை, தனது அணுசக்தித் திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரவோ அல்லது செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பைக் கைவிடவோ மறுத்து வருகிறது. இது டிரம்ப்பிற்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
"நான் இனி பொறுமையாக இருக்கப் போவதில்லை. அவர்கள் ஒரு உடன்படிக்கைக்கு வர வேண்டும்," என்று பாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியின் "ஹானிட்டி" (Hannity) நிகழ்ச்சியில் ஒளிபரப்பான நேர்காணலில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
