May 21, 2026 - 09:50 AM -
0
ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரில் தங்களது முதல் ஆறு போட்டிகளில் ஐந்து தோல்விகளை சந்தித்ததால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பிளேஆஃப் போட்டியில் இருந்து கிட்டத்தட்ட வெளியேறிவிட்டதாக கருதப்பட்டது. இருப்பினும், தற்போது அந்த அணி தொடர் வெற்றிகளைப் பெறுவதால் நிலைமை மாறி வருகிறது. நேற்று (20) ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் மும்பை அணி சார்பில் அதிகபட்சமாக கார்பின் போஷ் 32 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் கொல்கத்தா அணி சார்பில் கேமரன் கிரீன் மற்றும் சௌரப் துபே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்நிலையில் 148 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 18.5 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலக்கை அடைத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அனைத்து அணிகளும் இப்போது 13 போட்டிகளில் விளையாடிவிட்டன. மூன்று பிளேஆஃப் இடங்கள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளன.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (18 புள்ளிகள்), குஜராத் டைட்டன்ஸ் (16 புள்ளிகள்) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (16 புள்ளிகள்). மீதமுள்ள ஒரு இடத்திற்காக ஐந்து அணிகள் போட்டியிடுகின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் (14), பஞ்சாப் கிங்ஸ் (13), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (13), சென்னை சூப்பர் கிங்ஸ் (12) மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் (12). அடுத்த சுற்றுக்கு முன்னேற, இந்த அணிகள் அனைத்தும் தங்களின் கடைசிப் போட்டியில் வெற்றி பெற வேண்டும்.
இருப்பினும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களது கடைசி ஆட்டத்தில் தோற்றாலும் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெற ஒரு சிறிய வாய்ப்பு உள்ளது. ஆனால் அது நடக்க வேண்டுமானால், அவர்கள் ஒரு வலுவான ரன் ரேட்டை கொண்டிருக்க வேண்டும், மேலும் போட்டியில் உள்ள மற்ற அணிகள் தங்களது ஆட்டங்களில் தோற்க வேண்டும்.
டெல்லி கேபிடல்ஸ் அணி தங்களது இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோற்றாலும் முன்னேற வேண்டுமானால், அந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை விட குறைவான ரன் ரேட்டைக் கொண்டிருக்க வேண்டும்.
நேற்று போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், கொல்கத்தா அணி புள்ளிகள் பட்டியலில் 8 ஆவது இடத்தில் இருந்து 6 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
எனினும், இந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற வருகிற 24 ஆம் திகதி நடைபெறும் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையிலான போட்டி முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இந்தப் போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெற்றால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து வெளியேற நேரிடும்.

