May 22, 2026 - 11:02 PM -
0
டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களைச் சேர்ந்த 21 உறுப்பினர்கள் இன்று (22) காலை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர்களில் "மஹவத்தே சாமர" மற்றும் "குடு துமிந்த" ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.
இதில் "மஹவத்தே சாமர" மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திடமும், "குடு துமிந்த" மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடமும் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
சந்தேகநபர்கள் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு தப்பியோடி மறைந்திருந்த போது, அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
மத்திய கிழக்கு போரின் போது பயன்படுத்தப்பட்ட ட்ரோன் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளின் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் இவர்களது கைப்பேசிகளில் காணப்பட்டதை தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பின்னர் இந்த 21 பேரும் இன்று (22) காலை இரண்டு விமானங்கள் மூலம் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டனர். இவர்களில் இருவர் பெண்களாவர், ஏனைய 19 பேரும் ஆண்களாவர்.
சார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா (Air Arabia) நிறுவனத்திற்குச் சொந்தமான G9-587 மற்றும் G9-502 ஆகிய இரண்டு விமானங்கள் மூலம் இன்று அதிகாலை 2:30 மணியளவில் இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
எனினும், அந்த நேரத்தில் கட்டுநாயக்க விமான நிலையப் பகுதியில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக அவ்விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.
பின்னர் வானிலை சீரானதும் இன்று காலை 8:10 மணியளவில் இரு விமானங்களும் மத்தளவிலிருந்து மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.
அவர்களில், G9-587 என்ற விமானம் மூலம் கொழும்பைச் சேர்ந்த பொத்துமுல்ல கங்கானம்கே சானுக புஷ்பகுமார, கிருபானந்த கெவ்தேமான், கலுபே மஹஹேவகே சலன சங்கீத், மொஹமட் சப்ராஸ் மற்றும் மினுவாங்கொடையைச் சேர்ந்த மல்தெனியகே கசுன் சச்சன, கம்பஹாவைச் சேர்ந்த வலிமுனிதேவகே மதுசங்க புஷ்பலால், ராகமையைச் சேர்ந்த தினுக பிரபாத், அனுராதபுரத்தைச் சேர்ந்த தில்ஷான் சுகத் குமார, எம்பிலிப்பிட்டியவைச் சேர்ந்த கொடமுனே விதானகே அஜித் குமார, நீர்கொழும்பைச் சேர்ந்த பிரதீப் குமார ஆகிய 10 பேர் அழைத்து வரப்பட்டனர்.
G9-502 என்ற விமானம் மூலம் கொழும்பைச் சேர்ந்த கலுத்தரகே சதுர புத்திக, கலுபே மஹஹேவகே கெஹானி கௌஷிகா, அச்சில நிரங்க குமார, தோல்க முதியன்சேலாகே ரொஷான் பிரதீப் ரொட்ரிகோ, அனுராத உபசாந்த பெர்னாண்டோ மற்றும் மாரவிலவைச் சேர்ந்த அம்பகஹகே சுபுன் திலின, சுந்தரதாஸ் சுலோச்சனா, ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் வசித்து வந்த கிளாரன்ஸ் தினேஷ் மதுசங்க, முந்தலத்தை சேர்ந்த வீரபாஹு முதியன்சேலாகே துசித பிரதீப், வாரியப்பொலவைச் சேர்ந்த சுரத் துஷார பெரேரா, தெஹிவளையைச் சேர்ந்த சமன் புஷ்பலால் பெரேரா ஆகிய 11 பேர் நாடுகடத்தப்பட்டிருந்தனர்.
விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இவர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர், இவர்களைச் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

