Jun 8, 2026 - 10:38 AM -
0
யாழ்ப்பாணம் - உடுவில், கல்லாரை பகுதியில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் தலைமையில் நேற்று (07) விசேட பெண்கள் சந்திப்பு நிகழ்வொன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபவானந்தராஜா, உடுவில் பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் மற்றும் பெருமளவிலான பெண் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதன் போது கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர்,
"கடந்த கால அரசாங்கங்களைப் போல் அல்லாது, எமது அரசாங்கம் கடந்த ஒரு வருட காலமாக நாட்டின் கடன்களை முறையாகச் செலுத்தி, தற்போது பொருளாதார ரீதியாக ஒரு நல்ல நிலைக்கு நாட்டைக்கொண்டு வந்துள்ளது. ஜனாதிபதி தனக்கு கிடைக்கவிருந்த ஓய்வூதியத் தொகையை திறைசேரிக்கு வழங்கியுள்ளார். அதுபோல, எனக்கு வழங்கப்பட்ட இரண்டு சொகுசு வாகனங்களையும் ஏலத்தில் விற்பனை செய்து, அந்தப் பணத்தை அரசாங்கத்தின் பொதுத் தேவைகளுக்குப் பயன்படுத்தவுள்ளோம்.
பால்மா, சீனி உள்ளிட்ட அடிப்படை உணவுப் பொருட்களின் விலைகளை அரசாங்கமே தீர்மானித்து வருகிறது. புதிய நாட்டை உருவாக்குவதற்காக இரவும் பகலும் பாராது உழைக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை நாம் பலப்படுத்த வேண்டும். அமைச்சர்களாகிய எமக்கு அவர் நள்ளிரவு ஒரு மணிக்குக் கூட கூட்டங்களை நடத்தி, நாட்டின் முன்னேற்றத்திற்காகச் சேவையாற்றி வருகிறார்" என தெரிவித்தார்.
இதனையடுத்து கருத்து தெரிவித்த அமைச்சர் சாவித்திரி போல்ராஜ்,
"நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக நாம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றோம். மாணவர்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தப் புதிய பேருந்து சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெண் பேருந்து நடத்துநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், பொலிஸ் நிலையங்களில் அதிகளவிலான பெண் உத்தியோகத்தர்களைச் சேவையில் அமர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெண்களுக்கான சுயதொழில் மற்றும் வேலைவாய்ப்புத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன" என தெரிவித்தார்.
அமைச்சர்களின் உரைகள் முடிவடைந்து, நிகழ்வின் இறுதிப் பகுதியில் நன்றியுரை ஆற்றப்பட்டுக் கொண்டிருந்த போது, சபையிலிருந்த பெண் ஒருவர் திடீரென எழுந்து அதிகாரிகளுடனும் அமைச்சர்களுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சங்கானை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த அப்பெண் தெரிவிக்கையில், "பெண்களுடன் கலந்துரையாடும் நிகழ்வு என்று கூறிவிட்டு, அமைச்சர்களும் மக்கள் பிரதிநிதிகளும் மட்டுமே நீண்ட நேரம் உரையாற்றினீர்கள். எங்களின் பிரச்சினைகளைக் கேட்க முற்படவில்லை" எனக் குற்றம் சாட்டினார்.
மேலும், தான் ஒரு நாய் காப்பகம் நடத்தி வருவதாகவும், அதற்கான அனுமதியைப் பிரதேச சபை மறுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், தனக்கு முறையான மலசலகூட வசதி இல்லை எனவும், அதனைக் கட்டுவதற்கான அனுமதியைக் கூடப் பெற முடியாமல் அரசு அதிகாரிகளால் தான் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு அநீதிக்குள்ளாகி வருவதாகவும் அவர் கண்ணீருடன் தெரிவித்தார். பெண் அமைச்சர் ஒருவர் வருகிறார் என்பதை விளம்பரம் மூலம் அறிந்து, தனது பிரச்சினைக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே இங்கு வந்ததாக அவர் கூறினார்.
எனினும், அடுத்த நிகழ்விற்குப் புறப்படத் தயாராக இருந்த அமைச்சர் சாவித்திரி போல்ராஜ், உடனடியாக அந்தப் பெண்ணின் அருகே சென்று அவரது குறைகளைக் கேட்டறிந்தார்.
தனது கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாகச் சமர்ப்பிக்குமாறும், அது குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் உறுதியளித்தார். மேலும், இது தொடர்பாக அப்பகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபவானந்தராஜாவைச் சந்தித்து மேலதிக விபரங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறும் அமைச்சர் அறிவுறுத்தினார்.
--

