Jun 8, 2026 - 05:36 PM -
0
அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் தனது சட்டபூர்வ வருமானத்தை மிஞ்சிய வகையில் 75 மில்லியன் ரூபாவிற்கும் அதிக சொத்துக்களை சட்டவிரோதமான முறையில் ஈட்டியமை தொடர்பில், முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (08) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக "அத தெரண" செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அசாத் நவாவி தலைமையிலான குழுவினர், வழக்கின் சாட்சியாளர்களிடமிருந்து சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, மேலதிக சாட்சி விசாரணை ஜூன் மாதம் 25ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், தனது சட்டபூர்வ வருமானத்தை விட 75 மில்லியன் ரூபாவிற்கும் அதிக சொத்துக்களை ஈட்டியதன் மூலம் இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாகக் கூறி, கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

