Jun 10, 2026 - 11:31 AM -
0
இயக்குநர் பாரதிராஜா மறைவு தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திரையுலகை சேர்ந்த பலரும் சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாரதிராஜா, 1977 ஆம் ஆண்டு வெளியான ‘16 வயதினிலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். அதன் பிறகு ‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’ உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களை இயக்கினார். ஸ்டூடியோவிலிருந்து தமிழ் சினிமாவை வெளியே கொண்டு வந்த பெருமை பாரதிராஜாவைச் சாரும்.
6 தேசிய விருதுகளை வென்ற தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படைப்பாளி பாரதிராஜா. 2004 ஆம் ஆண்டு பாரதிராஜாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்தது. 40 படங்களை இயக்கிய பாரதிராஜா, நடிகராகவும் முத்திரை பதித்தார். தனுஷூடன் அவர் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ படம் பெரும் வரவேற்பை பெற்றது.
90களின் முன்னணி நடிகைகளை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய பாரதிராஜா தமிழ் சினிமா சமகால நடிகர்களுடனும் நடித்துள்ளார். ஆனால், அவர் விஜய் உடன் பணியாற்ற முடியாமல் போனது. இது தொடர்பாக அவரே ஒருமுறை வெளிப்படையாக கூறியிருந்தார்.
இது தொடர்பாக கடந்த 2020 ஆம் ஆண்டு விஜயின் 46 ஆவது பிறந்த நாளில் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “என்கலைப்பயணத்தில் துரதிர்ஷ்டவசமாக, நான் தவிர்த்த ஓர் விதை. இன்று வலிகளை வலிமையாக்கி தமிழகத்தின் இளைஞர்களின், சொத்தாக உலகமே, கொண்டாப்படும் "விஜய்க்கு" இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
காதலாகட்டும், நடுத்தர குடும்ப கதாபாத்திரம் ஆகட்டும் நையாண்டி, நக்கலுக்கான அந்த ,உடல் பாவனை நடனத்தின் நளினம், சண்டைக்காட்சிகள், அதிலும் மேலாக கோடிக்கணக்கான ரசிகர்களை உலகம் முழுவதும் ஈர்த்துவைத்திருக்கின்ற, வெற்றியின் V என்ற முதல் எழுத்தாகக்கொண்ட விஜய்க்கு 46 ஆவது பிறந்த நாளில், எல்லா சிறப்பும் பெற்று, நீடூழிவாழ பாசத்துடன் வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
இதனிடையே முதல்வர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜா வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும், அரசு மரியாதையுடன் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

