Jun 10, 2026 - 12:03 PM -
0
இங்கிலாந்து டெஸ்ட் அணி தலைவர் பென் ஸ்டோக்ஸ், நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு நைட் கிளப்பில் நடந்த மோதலில் சிக்கி இருந்தார். அந்த விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முற்றிலும் ஓய்வு பெற அவர் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு, கடந்த 08 ஆம் திகதி அதிகாலையில் இங்கிலாந்து அணி தலைவர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் சக வீரர் கஸ் அட்கின்சன் ஆகியோர் லண்டனில் உள்ள ஒரு நைட் கிளப்பிற்குச் சென்றுள்ளனர்.
அங்கு ஒரு ரக்பி வீரருடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (இசிபி) தற்போது விசாரணை நடத்தி வருகிறது. அணியின் ஒழுக்க விதிகளை மீறியதாக இவர்கள் இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தால் அதிருப்தி அடைந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், 35 வயதான பென் ஸ்டோக்ஸ் தனது அணி தலைவர் பதவியிலிருந்து தானாக முன்வந்து விலக வேண்டும் அல்லது வாரியமே அவரை அணி தலைவர் பதவியிலிருந்து நீக்கும் என்று நெருக்கடி கொடுத்துள்ளதாக கிரிக்இன்போ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தானாக முன்வந்து அணி தலைவர் பதவியிலிருந்து விலகினால் அவர் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் ஒரு சாதாரண வீரராக விளையாட வாரியம் அனுமதிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், இங்கிலாந்து வாரியம் கொடுத்த இந்த கெடுவினால் பென் ஸ்டோக்ஸ் மற்றும் வாரியத்திற்கு இடையே கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அணி தலைவர் பதவியை மட்டும் இராஜினாமா செய்வதற்குப் பதிலாக, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தே முழுமையாக ஓய்வு பெற்றுவிடலாம் என்று பென் ஸ்டோக்ஸ் தீவிரமாக யோசித்து வருவதாகத் தெரிகிறது. இது இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இக்கட்டான இந்த சூழ்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஹார்மிசன், பென் ஸ்டோக்ஸுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.
அவர் தெரிவிக்கையில்,
"முழு உண்மையும் வெளிவரும் வரை நாம் எந்த முடிவிற்கும் வரக்கூடாது. பென் ஸ்டோக்ஸ் 15 வயது சிறுவனாக இருந்ததிலிருந்து எனக்குத் தெரியும். அவர் மிகவும் நேர்மையானவர். இந்த இக்கட்டான நேரத்தில் ஸ்டோக்ஸ் மற்றும் அட்கின்சன் ஆகிய இரு வீரர்களின் மன நலனை இங்கிலாந்து அணி நிர்வாகம் கவனித்துக் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

