Jun 10, 2026 - 03:30 PM -
0
அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் வரலாற்றில் நடந்த அனைத்தும் இன அழிப்பு என்றும், தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன அழிப்பு என உண்மைகளை வெளிப் படுத்தி உள்ளமையை தான் வரவேற்பதாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (10) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எங்களுடைய சகோதர குரு அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் தன்னுடைய வாழ்க்கையின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட பொழுது, வரலாற்றில் நடந்த அனைத்தும் இன அழிப்பு என்று, தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன அழிப்பு என்று சொல்லி மிகவும் தெளிவாக தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டு உண்மைகளை வெளிப்படுத்தி இருந்தார்.
அவருடைய அனுபவப் பகிர்வு எல்லாராலும் வரவேற்று, அது உண்மை என்று அது சொல்லப் பட்டிருக்கின்ற வேளையிலே, மன்னார் மாவட்டத்தில் இருக்கும் மக்களாகிய நாங்கள் அவருடைய இந்தக் கருத்துக்களை மிகவும் மதிப்போடு ஏற்றுக் கொள்கிறோம்.
அதே வேளையில், கொழும்பு மறைமாவட்டத்தின் உடைய குருவாகப் பணியாற்றுகின்ற அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த அதற்கு எதிரான ஒரு மனித உரிமை மீறலான ஒரு கருத்தை வெளியிட்டிருப்பது கத்தோலிக்க சமூகத்திற்கும், இலங்கை வாழ் மக்களுக்கும் அதிர்ச்சி அளிக்கிறது.
ஒரு கத்தோலிக்க குரு என்பவர் மற்றவர்களுக்காக தன் உயிரைக் கொடுப்பதற்காகத்தான் ஒரு குருவாக வருவது. அதனுடைய அந்தக் குருத்துவத்தின் உடைய மேன்மையை மறந்து, இவ்வளவு ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு இருக்கின்ற பொழுது, அது பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டு, பயங்கரவாதிகளை கொன்றது தான் இந்தப் போரின் உடைய நோக்கமாக இருந்ததே ஒழிய, இன அழிப்பின் நோக்கமாக இருக்கவில்லை என்பதை மிகவும் தெளிவாக பொய்யை அவர் தெளிவுப்படுத்தி இருக்கிறார்.
ஆனால், வரலாற்றில் 70 வருட காலத்துக்குக் காலம் நடைபெற்ற திட்டமிட்ட இன அழிப்புகளை மிகவும் தெளிவாக ஜீவந்த அருட்தந்தை சொல்லியிருப்பதை நாங்கள் இந்த வேளையிலே உறுதி செய்கிறோம்.
கடந்த 70 வருடங்களாக பல இடங்களில், வடக்கு கிழக்கில் திட்டமிட்ட முறையில் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டது உண்மையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது, சர்வதேச ரீதியிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஆகவே, இந்த வேளையிலே எங்களுடைய ஜீவந்த அருட்தந்தையின் உடைய கருத்துக்களை நாங்கள் ஏற்றுக் கொள்வதோடு, அவருக்கு ஆதரவாக மன்னார் மாவட்ட மக்களும், மன்னார் கத்தோலிக்க மக்களும் அவருக்கு ஆதரவாக இருப்பதோடு, அவருடைய இந்தக் குரலை நசுக்குவதற்கான பல முயற்சிகள் மேற் கொள்ளப்படுவதை நாங்கள் முற்றிலும் எதிர்கின்றோம்.
அவருடைய பயணம் தொடர நாங்கள் அவரோடு தோள் கொடுத்து, அவருடைய கருத்துக்களை இன்னும் வலுப்படுத்த நாங்கள் தயாராக இருப்பதோடு, அருட்தந்தை கிரிஷாந்த அவருடைய கருத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஒரு கத்தோலிக்க குரு என்ற ரீதியிலே கத்தோலிக்க குருவினுடைய இந்தக் கருத்து ஒரு காட்டுமிராண்டித்தனமான கருத்து என்பதை இந்த வேளையிலே நான் பதிவு செய்து கொள்கிறேன் என தெரிவித்தார்.
--

