Jun 12, 2026 - 06:03 PM -
0
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள கம்பஹா ஒஸ்மண்ட் என்ற ஒஸ்மண்ட் குணசேகரவை தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தொடர்ந்து தடுத்து வைத்து விசாரித்து வருவதாகக் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு இன்று (12) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைக்கையில், கைது செய்யப்பட்டுள்ள ஒஸ்மண்ட் குணசேகரவைத் தொடர்ந்து தடுப்புக் காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தனர்.
நீதிமன்ற தேடுதல் பிடியாணை ஒன்றைப் பெற்று ஒஸ்மண்ட் குணசேகரவின் வீடு மற்றும் வளவைச் சோதனை செய்தபோது, அங்கிருந்து சில முக்கிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
அவற்றில் போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபரான கெஹெல்பத்தர பத்மே என்பவருக்கு எதிராக விடுக்கப்பட்டிருந்த சிவப்பு அறிவித்தல் ஒன்றும் காணப்பட்டுள்ளது.
மேலும், கணேமுல்ல சஞ்சீவவுக்கு எதிராக இதற்கு முன்னர் இருந்த வழக்குகள், தற்போது நிலுவையிலுள்ள வழக்குகள் பற்றிய விபரங்கள், அவர் பழகிய நபர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் அடங்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன் மூலம், சந்தேகநபர் கணேமுல்ல சஞ்சீவவின் செயல்பாடுகள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருந்துள்ளார் என்பது தெளிவாவதாகப் பொலிஸார் சுட்டிக்காட்டினர்.
அவரது வீட்டு வளாகத்தில் இருந்து பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள் ஒன்றும், துப்பாக்கி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டதாகவும், அது குறித்து கம்பஹா நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்தச் சம்பவத்தின் சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை தொடர்ந்து 30 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கான உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, சந்தேகநபரான ஒஸ்மண்ட் குணசேகர சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அசித் சிறிவர்தன நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தனது கட்சிக்காரரைச் சந்திப்பதற்காகத் தாம் சென்றபோது, அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
எனினும், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்தனர்.
எவ்வாறாயினும், இது குறித்து விசாரிப்பதற்காக அடுத்த வழக்குத் தவணையின் போது கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளரை நீதிமன்றத்தில் முன்னிலையாகி காரணிகளை விளக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் மேலதிக விசாரணையை எதிர்வரும் ஜூன் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

