Jun 12, 2026 - 06:47 PM -
0
சாதாரண சூழ்நிலையின் கீழ் நாளாந்தம் 5.27 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக அதனைத் தினசரி 3.9 மில்லியன் டொலராகக் குறைக்க முடிந்துள்ளதாகவும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
இன்று (12) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே பிரதி அமைச்சர் இதனைத் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், வாகன இறக்குமதி தொடர்பாகச் சமூகத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த அச்சம் காரணமாக, அதிகளவில் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதால், அது தினசரி 6.8 மில்லியன் டொலர் வரை அதிகரித்த சந்தர்ப்பங்களும் இருந்ததாகப் பிரதி அமைச்சர் கூறினார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் அனில் ஜயந்த,
மத்திய கிழக்கின் யுத்த சூழ்நிலையின் அதிர்வுகள் பல்வேறு வழிகளில் நமது பொருளாதாரத்திற்குள் நுழைந்துள்ளன.
ஒரு நாடாக நாம் அதனை எதிர்கொள்ள வேண்டுமாயின், பொதுவாக அதில் தலையிட வேண்டியுள்ளது.
எரிபொருள் பிரச்சினையே நாம் பிரதானமாக எதிர்கொள்ள நேரிட்ட விடயமாகும். அந்தச் சூழ்நிலை விரைவில் தணியும் என நாம் பிரார்த்திக்கிறோம்.
ஆனால், இந்த நிலைமை தொடர்ந்து நீடித்தால் அல்லது மேலும் தீவிரமடைந்தால், நாட்டிற்குள் அதனை எவ்வாறு முகாமைத்துவம் செய்வது என்பது குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும்.
டொலருக்கு ஏற்பட்ட பாதிப்பு காரணமாகப் பொருட்களின் விலைகள் உயர்வதற்குக் காரணியாக அமைந்தது. இவ்வாறான நெருக்கடிகள் குறுகிய காலத்தில் தணிந்துவிடும்.
நாம் இந்த நேரத்தில் சில உத்திகளைக் கையாண்டுள்ளோம்.
அந்நியச் செலாவணி மாற்று விகிதம் போன்றதொரு சூழ்நிலையில், அது வழமைக்குத் திரும்பக் குறுகிய காலம் எடுக்கும்.
டொலருக்கான தேவையும் விநியோகமும் எவ்வாறு அமைகிறதோ, அதன்படியே இது தீர்மானிக்கப்படுகிறது.
நாம் எடுத்த முடிவுகளின்படி, நமது இறக்குமதிச் செலவு அதிகரிப்பதற்குக் காரணமான பொருட்களுள் வாகன இறக்குமதி முதலிடத்தைப் பிடித்திருந்தது.
எரிபொருளும் அவ்வாறே ஆகும். ஆனால், எரிபொருளை நம்மால் இப்போது கட்டுப்படுத்த முடியாது.
பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட வாகன இறக்குமதிகளை ஓரளவுக்குக் குறைத்துக் கொள்ளுமாறும், கட்டுப்படுத்துமாறும் நாம் கோரிக்கை விடுத்தோம்.
அதற்கான ஒரு பொறிமுறையையும் உட்படுத்தினோம்.
இப்போது அதன் முடிவுகள் ஓரளவுக்குக் கிடைத்து வருவதை நாம் காண்கிறோம்.
2025 ஆம் ஆண்டை எடுத்துக்கொண்டால், இந்தப் பொருளாதாரம் விரிவடைந்து சென்றபோது, வாகன இறக்குமதிக்காகத் தினசரி சராசரியாக 5.27 மில்லியன் டொலர் செலவிடப்பட்டிருந்தது.
நெருக்கடியான சூழ்நிலையிலும், நாட்டில் ஏற்பட்ட அச்சம் காரணமாகவும் மக்கள் அதிகளவில் வாகனங்களை இறக்குமதி செய்ய முற்பட்டதால், அது நாளாந்தம் 6.8 மில்லியன் டொலர் வரை அதிகரித்தது.
ஆனால், நாம் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக, ஜூன் 10 ஆம் திகதி வரை விடுமுறை நாட்களைத் தவிர்த்து 8 நாட்களில் வாகன இறக்குமதிக்காகச் சென்ற தொகை 31.72 மில்லியன் டொலராகும். அதாவது நாளாந்தம் 3.9 மில்லியன்டொலராகும்."
நாம் எதிர்பார்த்ததை விடவும் வாகன இறக்குமதி மிகக் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதை இதன் மூலம் அறிய முடிகிறது.

