Jun 17, 2026 - 11:09 AM -
0
23 ஆவது உலகக் கிண்ண கால்பந்து தொடரின் ‘ஜெ’ பிரிவில் இன்று (17) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணி, அல்ஜீரியாவை 3 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்த போட்டியில் மூன்று கோல்களை பதிவு செய்த லியோனல் மெஸ்சி, உலகக் கிண்ண வரலாற்றில் மேலும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளார்.
உலகக் கிண்ண கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையை ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோஸ் பெற்றுள்ளார். ஜெர்மனி அணிக்காக விளையாடிய அவர், 24 உலகக் கிண்ண போட்டிகளில் 16 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.
அல்ஜீரியாவுக்கு எதிரான இன்று (17) இடம்பெற்ற போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்ததன் மூலம், அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி தனது உலகக் கிண்ண கோல் எண்ணிக்கையை 16 ஆக உயர்த்தி, குளோஸின் சாதனையை சமன் செய்துள்ளார். மெஸ்சி இந்த இலக்கை 27 உலகக் கிண்ண போட்டிகளில் எட்டியுள்ளார்.
உலகக் கிண்ண வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் பிரேசிலின் முன்னாள் ஜாம்பவான் ரொனால்டோ நசாரியோ 15 கோல்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து பிரான்ஸ் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே, வெறும் 15 உலகக் கிண்ண போட்டிகளில் 14 கோல்கள் அடித்து நான்காவது இடத்தில் உள்ளார்.
38 வயதிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் லியோனல் மெஸ்சி, தற்போது குளோஸின் சாதனையை சமன் செய்துள்ள நிலையில், இந்த உலகக் கிண்ண தொடரிலேயே 17 ஆவது கோலை பதிவு செய்து புதிய உலக சாதனையை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

