Jun 19, 2026 - 03:06 PM -
0
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான ஷங்கரின் மகன் அர்ஜித், 'லவ்வர் பாய்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். இந்தப் படத்தின் பூஜை விழா நேற்று (18) கோலாகலமாக நடைபெற்றது.
தமிழ் சினிமாவில் 'ஜென்டில்மேன்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஷங்கர், 'காதலன்', 'ஜீன்ஸ்', 'இந்தியன்', 'முதல்வன்', 'பாய்ஸ்', 'அந்நியன்', 'சிவாஜி', 'எந்திரன்', 'நண்பன்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.
இருப்பினும், அவரது சமீபத்திய 'இந்தியன் 2' மற்றும் 'கேம் சேஞ்சர்' திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
ஷங்கரின் குடும்பத்தில் ஏற்கனவே அவரது இளைய மகள் அதிதி ஷங்கர் நடிகையாக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார். தற்போது அவரது மகன் அர்ஜித் ஹீரோவாக சினிமாவில் புதிய பயணத்தை தொடங்கியுள்ளார்.
இதற்கு முன்பு, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அர்ஜித், சிவகார்த்திகேயன் நடித்துவரும் 'மதராஸி' திரைப்படத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
இயக்குனர் அட்லீயின் உதவி இயக்குனரான அசோக் குமார் இயக்கும் 'லவ்வர் பாய்' திரைப்படத்தில் அர்ஜித் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளார்.
'லவ்வர் பாய்' திரைப்படத்தின் பூஜை விழா நேற்று நடைபெற்றது. இதில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பூஜை விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. ஷங்கரின் மகன் அர்ஜித்தின் ஹீரோ அறிமுகம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

