Jun 19, 2026 - 05:16 PM -
0
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (19) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த குற்றப்பத்திரிகையில் ஏனைய பிரதிவாதிகளாக சேபாலிகா சமன்குமாரி மற்றும் கீர்த்தி பண்டார கொடகம ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கின் பிரதிவாதிகளுக்கு எதிராக 10 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதோடு, 30 பேர் சாட்சிகளாகவும், 38 ஆவணங்கள் வழக்குப்பொருட்களாகவும் சேர்க்கப்பட்டுள்ளன.
மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான செவனகல, கிரியிப்பென்பெவ பகுதியில் அமைந்துள்ள காணியொன்றில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த கட்டிடம் உள்ளிட்ட சொத்துக்கள், கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி ஏற்பட்ட போராட்டங்களின் போது சேதமடைந்திருந்தன.
அச்சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்குவது நிராகரிக்கப்பட்டிருந்த பின்னணியில், அதற்கு முரணாக, இழப்பீட்டுக்கான அலுவலகத்தில் பணியாற்றிய சில அரச அதிகாரிகளுக்குத் தங்களது உத்தியோகபூர்வ அதிகாரத்தைப் பயன்படுத்தி அழுத்தம் கொடுத்து, 8,850,000/- ரூபா இழப்பீட்டைப் பெற்றுக்கொண்டதன் மூலம் "ஊழல்" எனும் குற்றத்தைப் புரிந்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை தொடர்பில் பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் இக்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

