Jun 19, 2026 - 06:16 PM -
0
சிறிலங்கா கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் குறித்து கலந்துரையாடுவதற்காக, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) தலைவர் ஜெய் ஷா, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது, சிறிலங்கா கிரிக்கெட் இடைக்கால குழுவின் பிரச்சினையே முதன்மையாக கலந்துரையாடப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விதிகளுக்கு முரணானது என கருதப்படும் சிறிலங்கா கிரிக்கெட் இடைக்கால குழு நியமனம் குறித்து, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடுவார் என இந்திய ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.
சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தை நடத்துவதற்காக, கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவினால் இடைக்கால குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், கிரிக்கெட் வட்டாரங்களின் தகவல்படி, சர்வதேச கிரிக்கெட் பேரவை கடந்த வாரம் சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி ஆஷ்லே டி சில்வாவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த கடிதத்தின் உள்ளடக்கம் இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றாலும், சிறிலங்கா கிரிக்கெட் விவகாரங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக தாமதமின்றி ஜனநாயக ரீதியிலான தேர்தலை நடத்துமாறு சர்வதேச கிரிக்கெட் பேரவை வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறிலங்கா கிரிக்கெட் சபைக்கு புதிய யாப்பினை தயாரிப்பது உள்ளிட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக, சர்வதேச கிரிக்கெட் பேரவை காலவரையற்ற கால அவகாசத்தை வழங்கும் என்று சிறிலங்கா கிரிக்கெட் இடைக்கால குழு எதிர்பார்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

