Jun 19, 2026 - 09:41 PM -
0
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணி ஒன்றை அமைக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போதைய நிலைமை ஒரு தீவிர தொற்றுநோயாக உருவெடுத்துள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க வலியுறுத்தியுள்ளார்.
"2017ஆம் ஆண்டில் மிக மோசமான டெங்கு தொற்றுப் பரவலைக் கண்டோம். அதற்கு நிகரான மட்டத்தில் தற்போது டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர்.
குறிப்பாக, கடந்த மே மாதம் நாடு முழுவதும் பதிவான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கையை விட, ஜூன் மாதத்தில் பதிவான எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மே மாதத்தில் 8,600 நோயாளர்கள் பதிவாகியிருந்தனர். ஆனால், ஜூன் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் மாத்திரம் 9,000க்கும் அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதிலிருந்தே இதன் ஆபத்து எவ்வளவு பெரியது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. கொழும்பு மாவட்டத்தில் கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், வாராந்தம் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 200 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
பதிவாகும் டெங்கு நோயாளர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் மேல் மாகாணத்திலிருந்தே பதிவாகின்றனர்.
இதில் உள்ள மிக பாரதூரமான விடயம் என்னவென்றால், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இன்னும் அதன் உச்சக்கட்டத்தை அடையாத போதிலும், சுகாதாரக் கட்டமைப்பு ஏற்கனவே தனது அதிகபட்ச கொள்ளளவை எட்டி வருகின்றது. ஊழியர்கள் மற்றும் மருந்துகள் தொடர்பாக பல சிக்கல்கள் நிலவுகின்றன.
இதனை ஒரு தேசிய அவசர நிலையாகப் பார்க்க வேண்டும். இனிவரும் நாட்களில் இந்த நிலைமை மேலும் அதிகரித்தால், சுகாதாரக் கட்டமைப்பால் இதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல் போகும்.
எனவே, அங்கொன்றும் இங்கொன்றுமாக டெங்கு ஒழிப்புத் திட்டங்களை முன்னெடுப்பதற்குப் பதிலாக, அனைத்துத் தரப்பினரையும் ஒரே இடத்திற்குக் கொண்டு வந்து, தேசிய மட்டத்திலான குழு அல்லது ஜனாதிபதி செயலணி ஒன்றை நிறுவ வேண்டும் என நாம் நம்புகிறோம். அத்துடன், தேசிய மட்டத்திலான இலக்கு நோக்கிய தற்காலிகச் செயல்திட்டம் ஒன்றை அறிவித்து, அதனை அடிமட்ட மக்கள் வரை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும்." என்றார்.

