Aug 3, 2026 - 06:40 PM
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் இன்று (03) மாலை நேர நிலவரப்படி 581 குடும்பங்களைச் சேர்ந்த 2,331 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வெள்ளப் பெருக்கில் சிக்கி இருவரும், மண்சரிவில் சிக்கி நால்வருமாக இதுவரை மொத்தம் 6 பேர் காணாமல்போயுள்ளனர். மேலும், சீரற்ற காலநிலை காரணமாக மூவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதுவரை 439 குடும்பங்களைச் சேர்ந்த 1,734 பேர் இடம்பெயர்ந்து 7 தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான சகல வசதிகளையும் நுவரெலியா மாவட்ட செயலகம் ஊடாக முன்னெடுத்து வருவதாக மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.
ஹட்டன், கொட்டகலை மற்றும் தலவாக்கலை ஆகிய பிரதேசங்களில் பல கிராமங்கள் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இருப்பினும், இன்று மாலையில் நுவரெலியா நகரில் மழை குறைந்து வெள்ள நீர் சற்று வடிந்துள்ள போதிலும், வீடுகளுக்குள் இன்னமும் வெள்ள நீர் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

