Aug 4, 2026 - 08:12 AM
பிஹாரின் பங்கிபூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளார். குஜராத்தின் மஞ்சல்பூர் தொகுதியில் பாஜகவும், மத்திய பிரதேசத்தின் டட்டியா தொகுதியில் காங்கிரஸும் வெற்றி பெற்றுள்ளன.
பிஹாரின் பங்கிபூர், குஜராத்தின் மஞ்சல்பூர், மத்திய பிரதேசத்தின் டட்டியா ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த 30-ம் திகதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. பிஹாரின் பங்கிபூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் நீரஜ் குமார், ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் ரேகா குமாரி, ஜன் சுராஜ் தலைவர் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
இந்த தொகுதியின் வாக்கு எண்ணிக்கையின்போது ஆரம்பம் முதலே பிரசாந்த் கிஷோர் முன்னிலையில் இருந்தார். அவர் 64,151 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் நீரஜ் குமாருக்கு 44,827 வாக்குகளும், ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் ரேகா குமாரிக்கு 14,273 வாக்குகளும் கிடைத்தன.
இதுகுறித்து பிரசாந்த் கிஷோர் கூறும்போது, “குற்றப்பின்னணி உடைய ஒருவரை பிஹாரின் முதல்வராக பாஜக தலைமை நியமித்து உள்ளது. அவரை மாற்றிவிட்டு நல்ல தலைவரை, முதல்வராக நியமிக்க வேண்டுகிறேன். பங்கிபூர் இடைத்தேர்தல் மூலம் இந்த கருத்தை மக்கள் முன்னிறுத்தி உள்ளனர்.
எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல தலைமை கிடைத்தால் பிஹார் மாநிலம் அதிவேகமாக முன்னேறும். நாங்கள் எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்க மாட்டோம். பிஹார் மக்களுடன் மட்டுமே கூட்டணி அமைப்போம். பங்கிபூர் தொகுதி மக்கள் எங்களது கட்சிக்கு அங்கீகாரத்தை வழங்கி உள்ளனர்” என்றார்.
பிஹார் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சாம்ராட் சவுத்ரி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “பங்கிபூர் ஜனநாயக திருவிழாவில் ஜன் சுராஜ் கட்சியை மக்கள் தேர்வு செய்துள்ளனர். மக்களின் முடிவை மதிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். குஜராத்தின் மஞ்சல்பூர் தொகுதியில் ஆளும் பாஜக சார்பில் போட்டியிட்ட சதீஷ் படேல், 55,481 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் பிக்காபாய் ரபாரிக்கு 24,851 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
மத்திய பிரதேசத்தின் டட்டியா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கன்ஷ்யாம் சிங் 66,757 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் அசுதோஷ் திவாரிக்கு 60,741 வாக்குகள் கிடைத்தன.
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக பிஹாரில் நடைபெற்ற போராட்டங்களின்போது மாணவ, மாணவியர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் ஜென்-ஸி இளைஞர்களின் வாக்குகள் பாஜகவுக்கு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பிஹார் முதல்வராக இருந்த நிதிஷ் குமார் கடந்த ஏப்ரலில் மாற்றப்பட்டார். இதனால் அவர் சார்ந்த குர்மி சமுதாய மக்கள், பங்கிபூர் இடைத்தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வாக்களித்ததாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் பங்கிபூர் தொகுதியில் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2025 பிஹார் தேர்தலில் 238 தொகுதிகளில் போட்டியிட்ட ஜன் சுராஜ் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. இதில் 3.3% வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

