Aug 4, 2026 - 09:41 AM
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்காக அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் குறித்து சர்வதேச நீதிபதிகள் சங்கம் தனது கவலையை வெளியிட்டுள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சர்வதேச நீதிபதிகள் சங்கம், குறித்த முன்மொழிவுகள் தன்னிச்சையான, தற்காலிக மற்றும் அவசரமான தீர்மானங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படக் கூடாது எனச் சுட்டிக்காட்டியுள்ளது.
உலகெங்கிலும் உள்ள நீதிபதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உலகின் மிகப்பழமையான மற்றும் மிகப்பெரிய சர்வதேச அமைப்பான சர்வதேச நீதிபதிகள் சங்கம், 1953 ஆம் ஆண்டு ஒஸ்திரியாவின் சல்ஸ்பர்க் நகரில் தொடங்கப்பட்டது.
இத்தாலியின் ரோமைத் தலைமையகமாகக் கொண்ட சர்வதேச நீதிபதிகள் சங்கம், நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் சட்டத்தின் ஆட்சியை மேம்படுத்துவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சர்வதேச அமைப்பாகும்.
இலங்கை அரசாங்கம் அண்மையில் அறிவித்துள்ள இந்த முன்மொழியப்பட்ட சட்டமூலம் தொடர்பில், இலங்கை நீதித்துறை சேவைச் சங்கம் மற்றும் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் உட்பட பல அமைப்புகளும் விமர்சகர்களும் சுட்டிக்காட்டியுள்ள தீவிர நிலைமை குறித்துத் தனது அமைப்பின் கவனம் திரும்பியுள்ளதாக சர்வதேச நீதிபதிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இத்தகைய சட்டங்களை தர்க்கரீதியான, கொள்கைசார்ந்த மற்றும் வலுவான அரசியலமைப்புச் சட்டத் திருத்த நடைமுறையின் மூலமே கொண்டுவர வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அவ்வாறு இல்லையெனில், நீதித்துறையின் சுதந்திரம் சீர்குலைந்துவிடும் என்பதால், முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலத்தை மறுபரிசீலனை செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கௌரவத்துடன் கேட்டுக்கொள்வதாகச் சர்வதேச நீதிபதிகள் சங்கம் தனது அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

