Aug 10, 2026 - 09:45 AM

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
போலவத்தை மற்றும் பொரலெஸ்ஸ புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட புகையிரதக் கடவையில் கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் மோதுண்டதில் லுணுவில பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாரவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவர் உயிரிழந்துள்ளதுடன், வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேநேரம் தங்கொட்டுவ, சுமகீ சந்தை - மெட்டிகொட்டுவ கிளை வீதியில் முச்சக்கர வண்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு நபர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் பலத்த காயமடைந்த சாரதி மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் நிகவெரட்டிய - குருநாகல் வீதியின் மாகல்லேகம பகுதியில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வலதுபுறமாக திரும்ப முற்பட்ட போது எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த 52 வயதுடைய பெண் ஒருவர் நிகவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு வீதியின் 46 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனரும் பின்னால் பயணித்தவரும் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னால் பயணித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் சிவநகர் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞராவார்.













