Aug 10, 2026 - 10:20 AM

மன்னார் மாவட்டத்தில் கடந்த பல வருடங்களாக குறித்த மின்தடை ஏற்பட்டு வருகின்ற சந்தர்ப்பங்கள் காணப்படுகின்ற நிலையில், அப்பகுதியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து வருகின்றனர்.
கடந்த ஆட்சிக் காலங்களில் அதிகாரங்களில் காணப்பட்ட குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த மின் தடை பிரச்சினைக்கு ஏன் நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகதீஸ்வரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
மன்னாரில் கடந்த 08 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினரிடம் குறித்த மின்தடை பிரச்சினை தொடர்பாக வினா எழுப்பப்பட்ட போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மின்தடை ஏற்பட்டு வருவது குறித்து தொலைபேசி வாயிலாகவும், நேரடியாகவும் பலர் தெரிவித்து இருக்கிறார்கள். இதற்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை நாங்கள் உணர்கிறோம்.
அந்த வகையில், இது இந்த விடயம் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெறுவதாக மக்கள் தெரிவித்தார்கள்.
ஆனாலும், நான் இது கேள்விப்பட்ட உடனேயே அரசாங்க அதிபரோடு தொலைபேசி தொடர்பு கொண்டு, அரசாங்க அதிபர் மற்றும் மன்னார் மாவட்ட மின்சார சபையினுடைய நிறைவேற்று பொறியியலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உடைய மன்னார் மாவட்ட பொறியியலாளர், அதேபோல் இது தொடர்பான அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு உடனடியாக இது தொடர்பாக நான் வினவி இருந்தேன்.
தற்பொழுது மின்சார சபையினுடைய நிறைவேற்று பொறியியலாளர் கூறியிருந்தார் இந்த மின்சார இணைப்பு உயிலங்குளத்தில் இருந்து மன்னார் தீவு பகுதிக்கு வருகின்ற மின்சார இணைப்பில் உடைய கம்பிகளில், இரவு நேரங்களில் இந்த காற்று கூடுதலாக இருக்கின்ற காலப்பகுதியில் அந்த மணல் அல்லது துகள்கள் ஈரத்துடன் அந்த மின் கம்பிகளில், மின்சாரம் வழங்குகின்ற விநியோக கம்பிகளில் படி வதால் அடிக்கடி மின்சாரம் தடை படுவதாக காரணம் கூறியிருந்தார்.
நான் கூறியிருந்தேன், தொடர்ச்சியாக இவ்வாறு இருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, ஒரு நிரந்தரமான தீர்வு நிச்சயமாக மக்களுக்கு வழங்க வேண்டும்.
காரணம் என்னவென்றால், க.பொ.த உயர்தர பரீட்சை மட்டுமல்ல, ஏனைய பரீட்சைகள், ஏனைய சாதாரண மக்களுக்கும் இது ஒரு அசௌகரியமான சூழ்நிலையை ஏற்படுத்துகின்றது.
அதேபோல் இலத்திரனியல் சாதனங்கள் கூடுதலாக பழுதடைவதாக மக்கள் முறைப்பாடு செய்திருக்கிறார்கள். எனவே, விரைவாக இதற்கு நிரந்தர தீர்வொன்றை எட்ட வேண்டும் என்ற வகையில் கூறியிருந்தேன்.
அதற்கு உடனடியாக உயிலங்குளத்தில் இருந்து வருகின்ற அந்த பிரதான இணைப்பை மன்னார் - வவுனியா பாதை ஊடாக அதாவது RDA விற்கு சொந்தமான அந்த வீதி அருகே உள்ள பாதை ஊடாக இந்த மின்சார இணைப்பை மன்னார் தீவு பகுதிக்கு வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
அதற்கான வேலைத்திட்டங்கள் ஏற்கனவே முழு அனுமதியும் பெற்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் இரண்டு வாரங்களுக்குள் முழுமையாக அதை நிவர்த்தி செய்து தருவதாக மின்சார சபையினர் கூறியிருக்கின்றார்கள்.
எங்களைப் பொறுத்தவரையிலே, மக்களுடைய பிரச்சனைகளை அவ்வப்போது இனங்கண்டு, அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ற வகையில் தீர்த்து வைப்பதில் எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எப்போதும் பின்னிற்க போவதில்லை.
இதேவேளை, பாராளுமன்றத்திலே ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களும் குரல் எழுப்பி இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.
இந்த மின்சார விநியோக தடை சம்பந்தமாக. இவர்களுக்கு நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன். இவர்கள் தான் ஏற்கனவே இந்த 15 வருடமாக இங்கே மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்களாகவும், அதேபோல் மன்னார் மாவட்டத்தினுடைய பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.
ஏன் இவர்களால் அப்பொழுது இதற்கு நிரந்தரமான தீர்வு காண முடியவில்லை?
இப்பொழுது ஒரு சந்தர்ப்பவாதம் போல் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு இவ்வாறு இடம்பெறுகிறது என்று ஏதோ இன்று நேற்று இடம்பெற்றது போல அவர்கள் கூறுகின்றார்கள்.
எனவே, எங்களுடைய அரசாங்கத்தைப் பொறுத்தவரையிலே மக்களுக்கான பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வை வழங்க வேண்டும் என்ற வகையில், நாங்கள் அதற்கான நிரந்தர தீர்வை எட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கின்றோம்.













