Aug 10, 2026 - 10:10 PM

மலேசியாவில் கைது செய்யப்பட்டு இன்று (10) நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட, "ரத்மலானே சைமா" எனப்படும் தனுஷ்க கௌசல்ய என்ற திட்டமிடப்பட்ட குற்றவாளியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல குற்றங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால், மலேசிய பொலிஸ் மற்றும் சர்வதேச பொலிஸின் (Interpol) உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே, சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் 41 வயதுடைய ரத்மலானையைச் சேர்ந்தவர் என்பதோடு, அவர் பேராதனை மற்றும் திஸ்ஸமஹாராம ஆகிய பகுதிகளிலும் தற்காலிகமாக வசித்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
2014 ஆம் ஆண்டு பேராதனை பொலிஸ் பிரிவில் துப்பாக்கியைக் காட்டி நபர் ஒருவரைக் கடத்திச் சென்று தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தியமை மற்றும் 2016 ஆம் ஆண்டு அதே பொலிஸ் பிரிவில் நபர் ஒருவரைச் சுட்டுக்கொன்றமை தொடர்பில் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகளில் அவர் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வழக்குகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகாமையினால் அவருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இது தவிர, 2003 ஆம் ஆண்டு கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டமை தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலும், 2007 ஆம் ஆண்டு கைக்குண்டு வைத்திருந்தமை தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சந்தேகநபர் மலேசியாவில் கைது செய்யப்பட்டபோது, அவருடன் இருந்த ரத்மலானையைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரும், கல்கிஸ்ஸையைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளுக்காக அவ்விருவரும் இன்று நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பொலிஸார் நடத்திய விசாரணையில் "ரத்மலானே சைமா" என்பவர், பலத்த குற்றச்செயல்களில் ஈடுபடும் பிரதான குற்றவாளியான "கஞ்சிபானி இம்ரானின்" நிதி நடவடிக்கைகளைக் கையாண்டு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
கஞ்சிபானி இம்ரானின் சமூக வலைத்தள நடவடிக்கைகளையும் சைமாவே நிர்வகித்து வந்ததோடு, அவரது குரல் பதிவுகளைச் சமூக வலைத்தளங்களில் பரப்புவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அத்துடன், கடந்த ஆண்டு கஞ்சிபானி இம்ரானின் ஆலோசனையின் பேரில், "கெஹெல்பத்தர பத்மே" என்பவருக்கு மலேசியாவில் தலைமறைவாக இருப்பதற்குச் சைமா வசதிகளைச் செய்து கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில காலம் பிரான்ஸில் தங்கியிருந்த "குடு அஞ்சு" என்பவரின் நெருங்கிய கூட்டாளியாகச் செயற்பட்ட சைமா, பின்னர் கஞ்சிபானி இம்ரானுடன் இணைந்துகொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
"குடு அஞ்சு" என்பவர் சைமாவைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாகவும், அதுகுறித்து கஞ்சிபானி இம்ரான் அவருக்கு எச்சரித்த பின்னரே, சைமா கஞ்சிபானி இம்ரானுடன் நெருக்கமாகச் செயற்படத் தொடங்கியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சைமா சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே மலேசியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டுதல் மற்றும் நேரடி மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளன.













