Aug 11, 2026 - 03:33 PM

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின் (UNHCR) உதவியுடன் மீண்டும் தாயகம் திரும்ப எதிர்பார்க்கும் இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவருவதற்காக சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே இவ்வாறு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்கு அமைவாக, பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்றி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது:
2006-08-01 இற்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட துறைமுகம் மற்றும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு இல்லாமல் நாட்டிலிருந்து வெளியேறி இந்தியாவில் இடம்பெயர்ந்தவர்கள், அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் மூலம் தமது இலங்கை அடையாளத்தை உறுதிப்படுத்திய பின்னர், அரசு புலனாய்வுச் சேவையிடமிருந்து ஒப்புதல் அனுமதி அறிக்கையைப் பெற்றுக்கொள்ளல்.
குறித்த நபர்கள் கொலை, அரசுக்கு எதிரான துரோகம் மற்றும் சட்டத்தின் விசேட ஏற்பாடுகளின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களைச் செய்யாதவர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளல்.
அவ்வாறு உறுதிப்படுத்தப்பட்ட நபர்களுக்குத் தற்காலிக வெளிநாட்டு கடவுச்சீட்டை வழங்கி, 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்திற்கமைய, எந்தவித சட்ட நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தாமல் அங்கீகரிக்கப்பட்ட துறைமுகங்கள் ஊடாக நாட்டுக்கு வருகை தர வாய்ப்பளித்தல்.
2006-08-01 முதல் யுத்தம் முடிவடைந்த 2009-05-19 ஆம் திகதி வரை முறையான ஆவணங்களின்றி இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தவர்கள், தூதரகத்தின் மூலம் அடையாளத்தை உறுதிப்படுத்தி, புலனாய்வுச் சேவையின் ஒப்புதலைப் பெற்ற பின்னர், குடிவரவு மற்றும் குடியகல்வுக்கட்டுப்பாட்டாளரின் அதிகாரங்களின் பிரகாரம் சட்ட நடவடிக்கைகளின்றி நாட்டுக்குத் திரும்ப சந்தர்ப்பம் வழங்குதல்.
இருப்பினும், கொலை, தேசத்துரோகம் போன்ற பாரிய குற்றங்களுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்படும் நபர்கள், துறைமுகங்களில் வைத்துத் தடுக்கப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உரிய நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுவர்.













