Aug 14, 2026 - 01:28 PM

ஜப்பானிய தலைநகர் டோக்கியோவை அடுத்துள்ள சீபா (Chiba)மாகாணத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, டோக்கியோ - நரிட்டா சர்வதேச விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் முடங்கியுள்ளனர்.
குறித்த பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 360 மில்லிமீற்றருக்கும் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால், வீதிகள் மற்றும் ரயில் பாதைகள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கிப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த அசம்பாவிதங்களில் சிக்கி இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
மேலும் 22,000க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, போக்குவரத்து முடங்கியதால் நரிட்டா விமான நிலையத்தில் சுமார் 7,000 பயணிகள் இரவு முழுவதும் முனையங்களிலேயே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஜப்பானிய இராணுவத்தினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், "எனது வாழ்நாளில் இத்தகையதொரு கடுமையான இயற்கைப் பேரிடரை எதிர்கொண்டதில்லை" என சீபா மாகாண ஆளுநர் தோஷிஹிட்டோ குமாகாய் கவலை தெரிவித்துள்ளார்.























