Aug 18, 2026 - 10:16 AM



இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டாவை சேர்ந்த த்விஷா ஷர்மா மாடல் அழகியாகவும், நடிகையாகவும் திரைப்படங்களில் நடித்து வந்தார்.
கடந்த மே 13 ஆம் திகதி மத்தியப் பிரதேச மாநிலம் போபாலின் கட்டாரா மலைப்பகுதியில் உள்ள கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் த்விஷா ஷர்மாவின் உடல் மீட்கப்பட்டது.
தனது மகளை வரதட்சணை தொடர்பாக துன்புறுத்தி கொன்றுவிட்டதாகவும், அவர் வசித்து வந்த வீட்டின் கேமரா காட்சிகளில் முரண்பாடு உள்ளதாகவும் பெண்ணின் தந்தை நவ்நீதி ஷர்மா குற்றம்சாட்டியிருந்தார்.
இதையடுத்து தலைமறைவான பெண்ணின் கணவர் சமர்த் சிங் மற்றும் முன்னாள் மாவட்ட நீதிபதியான சமர்த்தின் தாயார் கிரிபலா சிங் ஆகியோர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர். இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ போபால் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
அதில், கணவர் சமர்த் சிங் மற்றும் மாமியார் கிரிபாலா சிங் ஆகியோர் அளித்த தொடர் மன உளைச்சல் மற்றும் கொடுமைகள் காரணமாக த்விஷா சர்மா தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லாமல் போயுள்ளது என்று சிபிஐ சுட்டிக்காட்டியுள்ளது
த்விஷா சர்மா பெற்ற மனநல ஆலோசனை குறித்த ஆவணங்கள், வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஆகியவை இதற்கு முக்கிய ஆதாரங்களாக குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.
குற்றப்பத்திரிக்கையின்படி, திருமணத்திற்குப் பிறகு த்விஷா சர்மா தொடர்ந்து மன ரீதியாக சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். கணவர் சமர்த் சிங் அவரைப் பலமுறை அவமானப்படுத்தி, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
மகனின் இந்த தவறான நடவடிக்கைகளுக்கு தாய் கிரிபாலா சிங் முழு ஆதரவு அளித்து ஊக்கப்படுத்தியுள்ளார். கணவர் மீது த்விஷா புகார் கூறும்போதெல்லாம் , கிரிபாலா தன் மகனுக்கு ஆதரவாக நின்று அவரைப் பாதுகாத்துள்ளார்.
த்விஷாவிற்கு நீண்டகாலம் மன உளைச்சலை ஏற்படுத்துவதே இருவரின் முதன்மை நோக்கமாகவும் திட்டமாகவும் இருந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2026 ஏப்ரல் மாதத்தில் த்விஷா கர்ப்பமானார். ஆனால், குடும்பத்தில் நிலவிய தொடர் கசப்பான சூழல், திருமண வாழ்க்கையின் மீது ஏற்பட்ட விரக்தி மற்றும் விரிசல் காரணமாக, கர்ப்பத்தை தொடர்வதா வேண்டாமா என்ற குழப்பத்தில் அவர் இருந்துள்ளார்
இறுதியாக தனது கர்ப்பத்தைக் கலைக்க த்விஷா முடிவெடுத்தார். இந்த முடிவால் த்விஷா, அவரது கணவர் சமர்த் சிங் மற்றும் மாமியார் கிரிபாலா சிங் ஆகியோருக்கு இடையேயான மோதல் தீவிரமடைந்தது. தொடர் மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.
மே 12 ஆம் திகதி இரவு 9.36 மணியளவில் த்விஷா தற்கொலை செய்துகொள்வதற்குச் சற்று முன்பு தனது நாத்தனார் ராஷி அப்ரோலுக்கு அனுப்பிய வாட்ஸ்அப் குறுஞ்செய்தியில், "உன் அண்ணனிடம் (சமர்த்) அவரது மனைவியின் எஞ்சிய உடலை வந்து எடுத்துக்கொள்ளச் சொல்.
ஆனால் நாளைக்கு வந்து எடுக்கச் சொல். இப்போது என்னை நிம்மதியாக சாக விடுங்கள்" என்று மெசேஜ் செய்திருக்கிறார்.
இந்த வாட்ஸ்அப் குறுஞ்செய்திதான், த்விஷா தீவிர மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டு தற்கொலைக்கு முயன்றார் என்பதற்கான மிக முக்கிய ஆதாரமாக சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் விசாரணை இன்னமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. த்விஷாவின் ஐபோன், சிசிடிவி மற்றும் குரல் மாதிரிகளின் தடயவியல் பரிசோதனை முடிவுகளுக்காக சிபிஐ காத்திருக்கிறது.

























