Aug 20, 2026 - 04:18 PM





தற்போதைய காலகட்டத்தில் மாணவர்களைப் பாடசாலைகளில் தக்கவைப்பது ஒரு சவாலாக மாறியுள்ளதாகவும், குறிப்பாக 16 வயதுக்கு மேற்பட்ட ஆண் பிள்ளைகள் கல்வியை விட்டு விலகும் போக்குக் காணப்படுவதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று (20) பாராளுமன்றத்தில் 'பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலத்தின்' இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ், எதிர்வரும் ஆண்டு முதல் 2ஆம் மற்றும் 6ஆம் தரங்களுக்கான பரிந்துரைக்கப்பட்ட புதிய பாடத்திட்டம் அமுல்படுத்தப்படும் என அவர் அங்கு குறிப்பிட்டார்.
அனைத்துப் முன்பள்ளிகளுக்கும் பொதுவான பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதுவும் எதிர்வரும் ஆண்டு முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்குத் தேவையான ஆசிரியர் பயிற்சிகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் கூறினார்.
பாடசாலை மாணவர் போக்குவரத்தின் போது ஏற்படும் பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்காக எதிர்காலத்தில் ஒழுங்குமுறைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் விளக்கமளித்தார்.
அந்த ஒழுங்குமுறைகளின் கீழ், பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு குறைந்தபட்ச வசதிகளை பூர்த்தி செய்வது கட்டாயமாக்கப்படும்.
குறிப்பாக, ஆசனப்பட்டி (Seat belts) மற்றும் பாதுகாப்பு கெமராக்கள் (CCTV) பொறுத்துவது கட்டாயமாக்கப்படும்.
தனது உரையின் இறுதியில் பிரதமர் சிறப்பு கோரிக்கை ஒன்றையும் விடுத்தார்.
பாடசாலை பிள்ளைகளின் மன சுதந்திரம் குறித்து பெற்றோர்களும் ஆசிரியர்களும் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, பாடசாலை விடுமுறைக் காலத்தில் பிள்ளைகள் அந்த விடுமுறையை சுதந்திரமாக அனுபவிக்க இடமளிக்குமாறு அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

























