Aug 21, 2026 - 04:47 PM





இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரையில் நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 93,381 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், டெங்கு நோய் பரவி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆவதுடன், அதன் இறப்பு விகிதம் 0.076 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
ஓகஸ்ட் மாதத்தின் கடந்த 20 நாட்களில் மட்டும் நாடளாவிய ரீதியில் 8,043 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
ஜூலை மாதத்தில் 29,964 நோயாளிகளும், ஜூன் மாதத்தில் 21,533 நோயாளிகளும் பதிவாகியிருந்த நிலையில்,வழக்கமான நிலவரத்துடன் ஒப்பிடும்போது ஓகஸ்ட் மாதத்தில் நோயாளர்களின் எண்ணிக்கையில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மொத்த நோயாளர்களில் 52.94 சதவீதமானோர், அதாவது 49,440 நோயாளர்கள் மேல் மாகாணத்தில் மாத்திரம் பதிவாகியுள்ளனர்.
தென் மாகாணத்தில் 13,697 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 8,441 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
இதற்கிடையில், மாவட்ட மட்டத்தில் அதிகூடிய எண்ணிக்கையான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில்தான் பதிவாகியுள்ளனர். அந்த எண்ணிக்கை 19,888 ஆகும்.
கொழும்பு மாவட்டத்தில் 18,535 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 6,755 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
இது தவிர மாத்தறை, களுத்துறை, காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் முறையே 6,077, 6,040, 5,122 மற்றும் 4,979 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், கொழும்பு மாநகரசபை எல்லைக்குள் 3,760 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் 76 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தொடர்ந்தும் அதி-அபாய வலயங்களாக இனங்காணப்பட்டுள்ளன.
நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களை வளாகங்களிலிருந்து அகற்றிச் சுற்றுச்சூழலைச் சுத்தமாகப் பேணுமாறும், காய்ச்சல் நிலை காணப்படுமாயின் தாமதிக்காமல் முறையான வைத்திய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் சுகாதார அதிகாரிகள், பொதுமக்களிடம் மேலும் கேட்டுக்கொள்கின்றனர்.

























