Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
யுத்தத்தின் சுவடுகள் மீண்டும் வரக்கூடாது! யாழில் பிரதமர் பேச்சு!

Aug 23, 2026 - 11:14 AM

யுத்தத்தின் சுவடுகள் மீண்டும் வரக்கூடாது! யாழில் பிரதமர் பேச்சு!
Mobitel Inner 1278
EDEX Inner

 மாற்றுத்திறனாளி மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் தடைகளையும் தாண்டி, துணிச்சலுடனும் விடாமுயற்சியுடனும் கல்வியில் முன்னேறி வருவது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

 

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்றைய தினம் (22) நடைபெற்ற, பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கும் நிகழ்வில் விசேட உரையாற்றிய பிரதமர் இதனை தெரிவித்தார்.

 

"இன்று எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாகும். சவால்கள், இடையூறுகள் மற்றும் நிராகரிப்புகளைத் தாண்டி, துணிச்சல், தன்னம்பிக்கை, திறமை மற்றும் விடாமுயற்சியால் இந்நிலையை அடைந்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களின் சாதனை பாராட்டுக்குரியது" எனப் பிரதமர் தெரிவித்தார்.

 

ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக இன்று வழங்கப்படும் உதவிகள், அவர்களின் துணிச்சலான பயணத்திற்கு மேலும் வலுசேர்ப்பதற்காகவே வழங்கப்படுகின்றன எனத் தெரிவித்த பிரதமர், மாற்றுத்திறனாளி மாணவர்கள் தமக்குப் பின்னால் வரும் மாணவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்பதே இந்த உதவித் திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் எனவும் குறிப்பிட்டார்.

 

மாற்றுத்திறனாளி மாணவர்கள் எதிர்கொண்ட கஷ்டங்கள், வேதனைகள் மற்றும் நிராகரிப்புகளைத் தாண்டி சாதித்திருப்பது பாராட்டுக்குரியது எனப் பிரதமர் தெரிவித்தார். அவர்களின் துணிச்சல், விடாமுயற்சி மற்றும் சாதனை, பின்னர் வரும் மாணவர்களுக்கு நம்பிக்கையையும் முன்மாதிரியையும் ஏற்படுத்த வேண்டும் எனவும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் சமூகத்திற்கு மதிப்புமிக்கவர்கள் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

 

இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அதிகளவான மாற்றுத்திறனாளிகள் காணப்படுவது கடந்த காலத்தில் இடம்பெற்ற கவலைக்குரிய யுத்தத்தின் மிகப் பெரும் பாதிப்புகளில் ஒன்றாகும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

 

"மீண்டும் ஒருபோதும் அவ்வாறான ஒரு யுத்தம் ஏற்படாத வகையில் செயற்படுவதும், அவ்வாறான நிலைமைகள் உருவாகுவதற்கான காரணிகளை இல்லாதொழிப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதேவேளை, கடந்த காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கும் நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றும் பிரதமர் தெரிவித்தார்.

 

மாற்றுத்திறனாளி மாணவர்கள் இன்று அடைந்துள்ள நிலைக்கு அவர்களது பெற்றோர், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வழங்கிய பங்களிப்பையும் பிரதமர் பாராட்டினார்.

 

ஜனாதிபதி நிதியம் கடந்த காலங்களில் சலுகைகளையும் வரப்பிரசாதங்களையும் அனுபவித்தவர்களுக்கு மாத்திரம் உதவும் நிறுவனமாக இருந்த நிலைமையை மாற்றி, உண்மையில் உதவி தேவைப்படும் மக்களை அடையாளம் கண்டு, அவர்களது தேவைகளுக்கு ஏற்ப உதவிகளை வழங்கும் நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், ஜனாதிபதி நிதியத்தை மக்களுக்கு மிகவும் நெருக்கமான நிறுவனமாக மாற்றி, உண்மையில் உதவி தேவைப்படும் மக்களுக்கு நேரடியாக உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

 

கல்வித்துறைக்கு அரசாங்கம் மிகுந்த முக்கியத்துவம் வழங்கி வருவதாகத் தெரிவித்த பிரதமர், முன்பள்ளிக் கல்வி முதல் உயர்கல்வி வரையிலான மாணவர்களின் கல்விப் பயணத்திற்குத் தேவையான பல்வேறு உதவித் திட்டங்களை ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக முன்னெடுத்து வருவதாகவும் கூறினார்.

 

இன்று பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கல்வியில் முன்னேறி வரும் மாணவர்களின் இளைய சகோதர, சகோதரிகள் மற்றும் அவர்களுக்குப் பின்னால் வரும் மாணவர்களுக்குக் கல்வியைத் தொடர்வதற்கான பாதையை மேலும் இலகுவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

 

மேலும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கல்வி நடவடிக்கைகளை எவ்வாறு மேலும் இலகுவாகவும் பயனுள்ளதாகவும் மாற்ற முடியும் என்பது தொடர்பான முன்னோடித் திட்டங்களும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

 

"மாற்றுத்திறனாளிகளுக்கும் சமூகத்தின் ஏனையோருக்கு நிகரான சம வாய்ப்புகளும் சம உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். அவர்களைப் பற்றிய சமூகத்தின் பார்வையிலும் மாற்றம் ஏற்பட வேண்டும். ஒவ்வொரு மாற்றுத்திறனாளி மாணவரின் துணிச்சல், போராட்டம் மற்றும் வெற்றிக் கதைகள் மற்றவர்களுக்கு நம்பிக்கையையும் முன்மாதிரியையும் வழங்கும் வகையில் உலகிற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும்" எனப் பிரதமர் தெரிவித்தார்.

 

இறுதியாக, மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு ஆதரவளித்து, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த உதவித் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வரும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஜனாதிபதி நிதியத்தின் மேலதிக செயலாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

 


MOST READ

காணொளி
இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

Mobitel 1278