Aug 24, 2026 - 10:14 AM





இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரைடன் கார்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெர்பி நகரில் உள்ள நைட் கிளப் ஒன்றில் நடந்த மோதல் சம்பவத்தை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தின் போது இங்கிலாந்து அணியின் முன்னாள் அணி தலைவர் பென் ஸ்டோக்ஸ் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் டெர்பிஷயர் அணிக்கு எதிராக டர்ஹாம் அணி 338 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் இரண்டு அரைசதங்கள் மற்றும் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மற்றொரு பந்துவீச்சாளரான மேத்யூ பாட்ஸ் 8 விக்கெட்டுகளையும், பிரைடன் கார்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியை அவர்கள் டெர்பி நகரில் உள்ள 'மோலி மலோனின் ஐரிஷ் டேவர்ன்' என்ற பிரபல நைட் கிளப்பில் கொண்டாடினர்.
அப்போது ஏற்பட்ட தகராறில் பிரைடன் கார்ஸை பொலிஸார் கையில் விலங்கு மாட்டி கைது செய்தனர். ஆனால் அவர் எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டார். கார்ஸ் கைதாகும் போது பென் ஸ்டோக்ஸ் மற்றும் மேத்யூ பாட்ஸ் அருகில் இருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இங்கிலாந்து வீரர்களின் இந்த ஒழுங்கீனச் செயல் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த ஜூன் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது பென் ஸ்டோக்ஸ் மற்றும் கஸ் அட்கின்சன் ஆகியோர் இதேபோன்று நைட் கிளப் மோதலில் ஈடுபட்டனர். அதுவே ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முக்கிய காரணமாக அமைந்தது. தற்போது மீண்டும் இங்கிலாந்து வீரர்கள் நைட் கிளப் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியில் பிரைடன் கார்ஸ் இடம் பெற்றுள்ளார்.
இவர் இங்கிலாந்து அணிக்காக 14 டெஸ்ட், 30 ஒருநாள் மற்றும் 14 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.























