Aug 30, 2026 - 11:54 PM





மொரட்டுமுல்லை, மேல் இதிபெத்த குரே பகுதியில் மனிதத் தலை ஒன்று காணப்படுவதாக மொரட்டுமுல்லை பொலிஸாருக்கு 119 அவசர தொலைபேசி இலக்கம் ஊடாக அழைப்பொன்று கிடைத்துள்ளது.
குறித்த தலை உடலிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், அது மர ஆலை ஒன்றின் பின்புறமாக உள்ள ஆற்றங்கரைக்கு அருகிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் மொரட்டுமுல்லை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தினேஷ் ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
மொரட்டுமுல்லை பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கல்கிஸ்ஸை குற்றவியல் விசாரணை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து களப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இன்று (30) காலை 8.00 மணியளவில் மர ஆலையின் உரிமையாளர் இதனைக் கண்டு பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.
மொரட்டுவை நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் சட்டத்தரணி சந்தமாலி சம்பவ இடத்திற்கு வருகை தந்து களப் பரிசோதனையை மேற்கொண்டார்.
அந்த மனிதத் தலை பெரிதும் அழுகிய நிலையிலும், விலங்குகளால் கடிக்கப்பட்ட நிலையிலும் காணப்படுவதுடன், மொரட்டுமுல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.























