Header Logo
SLIC
செய்திகள்
தற்போதைய மீன் விலை உயர்வுக்கு எல் நினோ காரணமல்ல

Sep 2, 2026 - 10:09 PM

தற்போதைய மீன் விலை உயர்வுக்கு எல் நினோ காரணமல்ல
Mobitel Inner 1278
EDEX Inner

எல் நினோ (El Niño) தாக்கத்தின் காரணமாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றங்கள், இலங்கையின் கடல் சூழலியல் அமைப்பு, மீன்வளம் மற்றும் மீன்பிடித் தொழில்துறையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை முன்கூட்டியே மதிப்பிடுவதற்காக, விரிவான தரவு பகுப்பாய்வுகளை உள்ளடக்கிய தொடர் ஆய்வுகளை தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிறுவனம் (NARA) ஆரம்பித்துள்ளது. 

இந்த ஆய்வுப் பணிகள், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு உள்ளிட்ட தொடர்புடைய அரச நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் பங்களிப்புடன் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுவதாக நாரா நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் சனத் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். 

இந்த ஆய்வுகளின் கீழ், கடல் நீரின் வெப்பநிலை, கடல் நீரோட்டங்கள், மீன் இனங்களின் பரவல் மற்றும் இடம்பெயர்வு, மீன் வளத்தின் அதிகரிப்பு மற்றும் குறைவு உள்ளிட்ட பல்வேறு கடல்சார் தரவுகள் தொடர்ச்சியாகச் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. 

குறிப்பாக, ‘எல் நினோ’ நிலைமையின் காரணமாக கடல் சூழலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், மீன் இனங்களின் எண்ணிக்கைக் குறைவு மற்றும் இடம்பெயர்வில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள், மீன் உற்பத்தியில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், அத்துடன் பவளப்பாறைகள் உள்ளிட்ட ஏனைய கடல் சூழலியல் கட்டமைப்புகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பிலும் இந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

அதேவேளை, கடல் வளங்களில் ஏற்படும் மாற்றங்கள் மீனவர்களின் வாழ்வாதாரத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பதால், கடலோர சமூகங்களின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பிலும் ஆய்வுக் குழுக்கள் கவனம் செலுத்தி வருகின்றன. 

இதன் மூலம், இலங்கையின் கடல் மற்றும் மீன்வளங்களில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களை முன்கூட்டியே அடையாளம் காணவும், அவற்றின் தாக்கங்களை மதிப்பிடுவதற்குத் தேவையான விஞ்ஞானத் தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும் முடியும் என நாரா நிறுவனம் எதிர்பார்க்கிறது. 

இந்த ஆய்வுகளின் முடிவுகள், ‘எல் நினோ’ போன்ற காலநிலை மாற்றங்களால் மீன்பிடித் துறைக்கு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்களை முன்கூட்டியே கணிப்பதற்கும், அதற்கேற்ற வகையில் கொள்கைத் தீர்மானங்களை மேற்கொள்வதற்கும், வள முகாமைத்துவ நடவடிக்கைகள் மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கைத் திட்டங்களைத் தயாரிப்பதற்கும் அதிகாரிகளுக்கு உதவியாக அமையும் என பேராசிரியர் சனத் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். 

குறிப்பாக, மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல், கடல் வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துதல் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காலநிலை சவால்களுக்கு மீன்பிடித் துறையைத் தயார்படுத்துதல் ஆகியவற்றுக்கு இத்தகைய விஞ்ஞான ஆய்வுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

எவ்வாறாயினும், தற்போது நாட்டில் காணப்படும் மீன் விலை உயர்வுக்கு ‘எல் நினோ’ நிலைமை காரணமாக இல்லை என நாரா நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் சனத் ஹெட்டியாராச்சி மேலும் தெளிவுபடுத்தியுள்ளார். 

தற்போதைய மீன் விலை உயர்வையும், ‘எல் நினோ’ காரணமாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்களையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திப் பார்ப்பது சரியானதல்ல என அவர் தெரிவித்துள்ளார். 

இலங்கையில் தற்போது ‘எல் நினோ’ நிலைமை காணப்படுவதாக உறுதிப்படுத்துவதற்கான விஞ்ஞான ஆதாரங்கள் இதுவரை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

எனவே, ‘எல் நினோ’ காரணமாக நாட்டில் மீன் வளம் குறைந்து வருவதாகக் கூற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

‘எல் நினோ’ தொடர்பான இந்த ஆய்வுகள், எதிர்காலத்தில் காலநிலை மாற்றங்களினால் கடல் சூழலியல் அமைப்பில் ஏற்படக்கூடிய தாக்கங்களை விஞ்ஞான ரீதியாக மதிப்பிட்டு, அவற்றை எதிர்கொள்வதற்கான முன்கூட்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே முன்னெடுக்கப்படுகின்றன என பேராசிரியர் சனத் ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய  விளக்கம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய விளக்கம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

Mobitel 1278