Sep 3, 2026 - 07:03 PM

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான 'குடு சலிந்து' என அழைக்கப்படும் சலிந்து மல்சித குணரத்னவிற்கு எதிராக பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இரண்டு வழக்குகளின் கோப்புகள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக 10 நீதிமன்ற ஊழியர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வாக்குமூலம் பெறப்பட்டவர்களில் 7 பெண் அதிகாரிகளும் அடங்குவதாக பாணந்துறை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷான் டி சில்வா தெரிவித்துள்ளார்.
வழக்குக் கோப்புகள் காணாமல் போனமை தொடர்பில் பாணந்துறை நீதவான் நீதிமன்றப் பதிவாளரால் பாணந்துறை தெற்கு தலைமையகப் பொலிஸில் நேற்று முன்தினம் (1) செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாகவே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, 'பி' அறிக்கையின் மூலம் நீதிமன்றத்திற்கு விடயங்களை அறிக்கை செய்த பின்னர், பாணந்துறை குற்றப் குற்றவியல் பணியகத்தினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குடு சலிந்துவின் வழிநடத்தலில் பாணந்துறை வடக்கு பகுதியில் இடம்பெற்ற மனிதப் படுகொலை தொடர்பான வழக்குக் கோப்பும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கிற்குரிய கோப்புமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் மனுவொன்றின் மூலம் கடந்த 28 ஆம் திகதி அழைக்கப்பட்ட வழக்கிற்குரிய அறிக்கையைக் கண்டுபிடிக்க முடியாமற்போனதால், உப கோப்பொன்றின் மூலம் அதனை மீண்டும் 31 ஆம் திகதி அழைப்பதற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே இந்த வழக்குக் கோப்புகள் காணாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த வழக்குக் கோப்புகளின்பிரதிகளை பெற்றுக்கொள்வதற்காக அலுவலக உதவியாளரிடம் ஒப்படைக்கப்பட்டு, ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த போதே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள CCTV கெமரா அமைப்புகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.
பாணந்துறை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷான் டி சில்வா மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஜயநெத்தி ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், பாணந்துறை குற்றவியல் பணியகத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரொஹான் விஸ்வநாத் மற்றும் பாணந்துறை தலைமையகப் பிரதான பொலிஸ் பரிசோதகர் உபுல் பிரியங்கர நாவுள்ளகே ஆகியோரின் வழிநடத்தலில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.



























