Sep 3, 2026 - 08:02 PM

மலையக மக்கள் நாட்டிற்கு வருகை தந்து 200 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், அவர்களுக்கு உறுதிப்பத்திரத்துடன் கூடிய சொந்த வீடொன்றையும் நிரந்தர முகவரியையும் வழங்குவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட இயற்கை அசாதாரண சூழ்நிலையினால் வீடுகளை இழந்த மக்களுக்காக பாலிந்தநுவர, பெலேத மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் முஹமதியாவத்தை புதிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 17 வீடுகளை அமைக்கும் பணிகள் இன்று (03) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் சமுதாய உள்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பும் கலந்துகொண்டார்.
2025 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முஹமதியாவத்தை புதிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ், உள்கட்டமைப்பு வசதிகளுடன் ஒரு வீடு 34 இலட்சம் ரூபா செலவில் 17 வீடுகள் அமைக்கப்படவுள்ளன.
அவற்றில் 12 வீடுகள் பெருந்தோட்ட மற்றும் சமுதாய உள்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழும், எஞ்சிய 5 வீடுகள் இந்திய வீட்டுவசதி உதவித் திட்டத்தின் கீழ் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலையீட்டுடனும் அமைக்கப்படவுள்ளன.
9 ஆண்டுகளாக கடும் ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொண்டு வீடற்ற நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்குவதற்காக இரு அமைச்சுகளின் கூட்டுப் பங்களிப்புடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதேவேளை, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்தப்படும் “சொந்தமாக இருக்க இடம் - ஒரு அழகான வாழ்க்கை” வீடமைப்பு உதவித் திட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் கட்டத்தின் கீழ் பாலிந்தநுவர பிரதேச செயலகப் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட 16 பயனாளிகளுக்கு தலா ஒரு மில்லியன் ரூபா வீதமான வீடமைப்பு உதவி காசோலைகளும் இன்று வழங்கி வைக்கப்பட்டன.
இதன் முதற்கட்டத்தின் கீழ் 08 பயனாளிகளுக்கு வீடமைப்பு உதவிகள் வழங்கப்பட்டு வீடமைப்புப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், மூன்றாம் கட்டத்திற்காக 55 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மலையக மக்கள் இந்நாட்டிற்கு வருகை தந்து 200 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அவர்களுக்கு உறுதிப்பத்திரத்துடன் கூடிய சொந்த வீடொன்று, முகவரி மற்றும் அடையாளத்தை வழங்க முடிந்தது தற்போதைய அரசாங்கத்தின் கீழேயே என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இங்கு தெரிவித்தார்.
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதி, இலக்கு நிர்ணயிக்கப்பட்ட திட்டமிடலின் கீழ் அதற்கான பணிகளுக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், எதிர்வரும் ஆண்டிற்கான அபிவிருத்தி திட்டங்களுக்காக அரசாங்கம் வரலாற்றிலேயே அதிகபட்ச தொகையாக 2,000 பில்லியன் ரூபாயை ஒதுக்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நீண்டகாலமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிரந்தர மற்றும் பாதுகாப்பான வீடுகளைப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என்றும், குறித்த வீடுகளை விரைவாக மக்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.



























