Sep 4, 2026 - 12:03 PM

INSEE சீமெந்து, தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை (NAITA) மற்றும் கட்டுபெத்த, கைத்தொழிற் பொறியியல் பயிற்சி நிறுவனம் (IETI) ஆகியவற்றுடனனான அதன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) புதுப்பித்துள்ளது. இதன் மூலம், இலங்கையின் முன்னோடியான தொழிற்துறை வழிநடத்தும் தொழிற்பயிற்சி முயற்சிகளில் ஒன்றாகத் திகழும் இக்கூட்டாண்மை 2031 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இப் புதுப்பிப்பு, NAITA மற்றும் IETI உடனான நீண்டகால ஒத்துழைப்பை தொடர்வதற்கான INSEE சீமெந்தின் அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துவதுடன் கல்விக்கும் தொழிற்துறைக்கும் இடையிலான இடைவெளியை குறைக்கும் அதன் நீண்டகால தொலைநோக்குப் பார்வையையும் வெளிப்படுத்துகிறது.
NAITA மற்றும் IETI ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இத் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை, INSEE Academy ஊடாக செயற்படும் INSEE Enterprise-based Vocational Education (EVE) Centre மூலம் நடைமுறைப்படுத்தி வருகிறது. 2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், நாட்டின் மிக நீண்ட காலமாக முன்னெடுக்கப்படும் தொழில்துறை கூட்டாண்மை கல்வித் திட்டமாக வளர்ந்துள்ளது. மேலும், கடந்த 19 ஆண்டுகளில் தொடர்ச்சியான தாக்கத்தை ஏற்படுத்தியதன் மூலம் வலுவான அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.
EVE Centre ஊடாக, மாணவர்கள் ஒன்றரை வருட காலப்பகுதியில் தேசிய தொழில்சார் தகைமை (NVQ) மட்டம் 4 பாடநெறியைத் தொடர்கின்றனர். இத்திட்டம் வகுப்பறைக் கல்வியுடன் புத்தளத்திலுள்ள INSEEஇன் சீமெந்து தொழிற்சாலையில் விரிவான நடைமுறைத் தொழிற்பயிற்சியையும் வழங்குகின்றது. NAITA பயிற்றுநர்கள் மற்றும் INSEEஇன் தொழில்நுட்ப நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் மின்னியல் வல்லுநர் (Electrician) மற்றும் பொதுப் பொருத்துநர் (General Fitter) ஆகிய துறைகளில் பயிற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் மூலம், உற்பத்தி மற்றும் பொறியியல் துறைகளில் சிறந்த தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில், தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ற திறன்களைக் கொண்ட பட்டதாரிகளை உருவாக்குவதே நோக்கமாகும்.
நீண்டகாலமாகத் தொடரும் இக் கூட்டாண்மை, க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தகுதி பெற்ற இளைஞர்களுக்கு நாடளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்பத் தகைமைகளையும், நேரடி தொழில்துறை அனுபவத்தையும் பெற்றுக்கொள்ள வாய்ப்பளித்து வருகிறது. 2026 ஆம் ஆண்டில், இத்திட்டத்தின் 16ஆவது குழு இணையும் நிலையில், தற்போது 24 பயிலுநர்கள் இதில் இணைந்துள்ளனர். அவர்களில் 12 பேர் மின்னியல் வல்லுநர் பிரிவிலும், 12 பேர் பொதுப் பொருத்துநர் பிரிவிலும் பயிற்சி பெற்று வருகின்றனர்.
திட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல், EVE Centre ஊடாக 260க்கும் மேற்பட்டோர் NVQ தகைமைகளைப் பெற்றுள்ளனர். இக் கூட்டாண்மையின் நீண்டகால செயற்பாடுகள், கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதிலும் இலங்கையின் திறன்மிக்க தொழில்நுட்ப மனிதவளத்தை மேலும் வலுப்படுத்துவதிலும் வெற்றிகரமாகப் பங்களித்து வருவதை எடுத்துக்காட்டுகின்றன.
INSEE நிறுவனத்தைப் பொறுத்தவரை, நிறுவனத்தின் எதிர்காலத் தேவைகளுக்கேற்றவாறு திறன்மிக்க மனிதவளத்தை தொடர்ந்து உருவாக்கி, கோட்பாட்டு அறிவுடனும் நடைமுறை அனுபவத்துடனும் கூடிய தகுதிவாய்ந்த தொழில்நுட்ப நிபுணர்களை உருவாக்குவதே அதன் நோக்கம் ஆகும். அதேவேளை, நிறுவனத்தின் வளர்ச்சியையும் நாட்டின் மனிதவளத் தேவைகளையும் ஒருங்கிணைத்து, அனைவருக்கும் பயனளிக்கும் வகையிலான வளர்ச்சியை உருவாக்குவதற்கான INSEE இன் அர்ப்பணிப்பையும் இது பிரதிபலிக்கிறது. உள்ளூர் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை மேம்படுத்துவதுடன், நிலையான சமூக அபிவிருத்திக்கும் இந்த முயற்சி பங்களிக்கிறது. திறன்மிக்க அடுத்த தலைமுறை தொழில்துறை நிபுணர்களை உருவாக்குவதன் மூலம், INSEE சீமெந்து, தொழில்துறையில் முன்னணி நிறுவனமாகவும் பொறுப்புணர்வுள்ள நிறுவனமாகவும் தனது பங்களிப்பை மேலும் வலுப்படுத்துகிறது. EVE Centre ஊடாக, INSEE நிறுவனம் தொடர்ந்து மக்களிலும் சமூகங்களிலும், இலங்கையின் தொழில்துறை அபிவிருத்தியின் எதிர்காலத்திலும் முதலீடு செய்து வருகிறது.



























