Sep 8, 2026 - 11:57 AM

இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனங்களின் சம்மேளனம் (FCCISL), கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதியமைச்சர் கௌரவ. சதுரங்க அபேசிங்க அவர்களுடன் உயர் மட்ட இருதரப்பு கொள்கை ரீதியான உரையாடலை செப்டெம்பர் 3, 2026 அன்று நாரஹேன்பிட்டியில் உள்ள அமைச்சின் தலைமையகத்தில் முன்னெடுத்தது. FCCISL இன் வியூகக் குழு மற்றும் அரச விவகாரக் குழுவால் உருவாக்கப்பட்ட தொலைநோக்குப் பார்வைக்கு அமைய, பிராந்திய தொழில்முயற்சி வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கும், அரசாங்கத்தின் புதிய தேசிய SME வியூகக் கட்டமைப்புடன் தனியார் துறையை ஒருங்கிணைப்பதற்கும் இந்த சந்திப்பில் ஒரு ஒருங்கிணைந்த வழிகாட்டி வரைபடம் ஸ்தாபிக்கப்பட்டது.
FCCISL இன் தலைவர் கலாநிதி எம். ரோஹித சில்வா தலைமையிலான தூதுக்குழுவினர், அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களிலும் 1,000 முதல் 5,000 வரையான அளவிடக்கூடிய சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை (SMEs) அடையாளம் காணவும், அடைக்காக்கவும் (incubate), மற்றும் மேம்படுத்தவுமான விரிவான திட்டமொன்றை முன்வைத்தனர். நாடு தழுவிய ரீதியிலான இந்தத் திட்டம் அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த அரச நிறுவனங்களின் நேரடி ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும். அமைச்சின் தொலைநோக்குப் பார்வைக்கு அமைய, மாற்றத்தக்க வளர்ச்சி, ஒருங்கிணைந்த அணுகுமுறை, சந்தை நோக்குநிலை, தொழில்முயற்சி சமூகம் மற்றும் விளைவுகள் தாக்கங்கள் என்பவற்றில் இந்த நிகழ்ச்சித்திட்டம் கவனம் செலுத்தும். வருமானம், ஏற்றுமதி, வேலைவாய்ப்பு, போட்டித்தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகிய கொள்கை இலக்குகளை அடைவதற்காக, FCCISL மற்றும் அமைச்சு இணைந்து நிறுவன வலுவூட்டல், திறன் மேம்பாடு, வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகளை உருவாக்குதல் மற்றும் சிக்கல் தீர்வு ஆகிய அணுகுமுறைகளை அமுல்படுத்தவுள்ளன.
9 பிராந்திய தூண்கள், 65 இணைந்த வர்த்தக சம்மேளனங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக சம்மேளனங்களின் கூட்டணிகளுடன் இணைந்துள்ள FCCISL, அரசாங்கக் கொள்கைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட நிலையான வட்டப் பொருளாதாரத்திற்கும் (circular economy) வளர்ச்சிக்கும் ஆதரவளித்து தனியார் துறையை வலுப்படுத்தும் நோக்கில் 3 ஆண்டு கால வழிகாட்டி வரைபடம் ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. துரித ஏற்றுமதி விரிவாக்கம் மற்றும் மூலோபாய இறக்குமதி பதிலீட்டை உந்துவதற்காக, அதிக முன்னுரிமை கொண்ட பொருளாதாரத் துறைகளை மையமாகக் கொண்ட பிராந்திய மட்டத்திலான அடைக்காக்கும் (incubation) அமைப்புகளை இந்த பங்காளித்துவம் உருவாக்கும். விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் (ICT), போக்குவரத்து மற்றும் தளவாடங்கள், சூழல் நட்பு தயாரிப்புகள், கடல் உணவுகள், மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட தெங்கு மற்றும் இறப்பர் தயாரிப்புகள் ஆகியவை இலக்கு வைக்கப்பட்டுள்ள கைத்தொழில்களில் அடங்கும்.
மேலும், இந்த வளரும் நிறுவனங்கள் சர்வதேச விநியோகச் சங்கிலிகளை அணுகுவதை உறுதி செய்வதற்காக, FCCISL தனது SMEs Go Global முன்னெடுப்பை கோடிட்டுக் காட்டியது. சார்க் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம், ஆசிய-பசிபிக் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனங்களின் கூட்டமைப்பு (CACCI), APTA CCI, ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) உள்ளிட்ட உலகளாவிய வர்த்தக அமைப்புகளுடனான சம்மேளனத்தின் வலுவான நிறுவன உறவுகளைப் பயன்படுத்தி, இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கான நேரடி சந்தை நுழைவை இந்த நிகழ்ச்சித்திட்டம் எளிதாக்கும். இந்த உலகளாவிய அணுகுமுறை மூலோபாயத்திற்கு அமைய, வரவிருக்கும் சர்வதேச வர்த்தக மற்றும் முதலீட்டுப் பயணங்களில் பங்கேற்குமாறு பிரதியமைச்சருக்கு FCCISL உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்தது. FICCI உடனான இந்தியாவுக்கான கூட்டு தூதுக்குழு பயணம், நியூசிலாந்துடனான இருதரப்பு வர்த்தக விஜயம், மற்றும் 2027 முற்பகுதியில் திட்டமிடப்பட்டுள்ள சவூதி அரேபியாவுடனான இலக்கு வைக்கப்பட்ட முதலீட்டு மன்றம் ஆகியவை இதில் அடங்கும். கட்டமைப்பு ரீதியான மூலதனத் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில், முக்கிய துறைகளை ஆதரிப்பதற்காக பிரத்தியேக அரச நிதி வழிமுறைகளைத் திறப்பது குறித்து இரு நிறுவனங்களும் மூலோபாய ரீதியாக கலந்துரையாடின. நிர்மாணத் துறையை ஸ்திரப்படுத்துவதற்காக நிர்மாண உத்தரவாத நிதியத்தை (Construction Guarantee Fund) திரட்டுவதுடன், ICT முயற்சிகள் மற்றும் வளர்ந்து வரும் ஆரம்ப நிறுவனங்களுக்கான (startups) பிரத்தியேக நிதிக் கருவிகள் குறித்தும் பேச்சுவார்த்தைகளில் வலியுறுத்தப்பட்டது.
இந்த பங்காளித்துவம், தேசிய கைத்தொழில் கொள்கையை அடிமட்ட தொழில்முயற்சி மேம்பாட்டுடன் இணைக்கும் ஒரு முக்கியமான படியைக் குறிக்கிறது, என FCCISL இன் தலைவர் கலாநிதி எம். ரோஹித சில்வா தெரிவித்தார். எங்கள் பிராந்திய வர்த்தக சம்மேளன வலையமைப்பை தேசிய SME கட்டமைப்புடன் நேரடியாக இணைப்பதன் மூலமும், சர்வதேச சந்தை வழிகளைத் திறப்பதன் மூலமும், உள்ளூர் வணிகங்களை உலகளாவிய ரீதியில் போட்டித்தன்மை வாய்ந்த நிறுவனங்களாக மாற்றக்கூடிய ஒரு செயற்பாட்டு ரீதியான, அளவிடக்கூடிய சூழலமைப்பை நாங்கள் உருவாக்குகிறோம். FCCISL தூதுக்குழுவில் முன்னாள் தலைவி திருமதி. ஷெர்லி ஜயவர்தன, அரச விவகாரக் குழுவின் தலைவர் திரு. ருவன் டி சில்வா, இடர் மற்றும் நிலைத்தன்மை குழுவின் தலைவர் திரு. தம்மிக லொக்குகே, வியூகக் குழுவின் இணைத் தலைவர் திரு. துசித் விஜேசிங்க, பணிப்பாளர் கலாநிதி விக்னேஷ் குலரத்னம், செயலாளர் நாயகம் திரு. திலான் எம். விஜேசூரிய, மற்றும் செயற்பாட்டுத் தலைவர் செல்வி எம். ஐ. எஸ். பாத்திமா ஆகியோர் அடங்கியிருந்தனர்.
FCCISL பற்றி
இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனங்களின் சம்மேளனம் (FCCISL) இலங்கையில் உள்ள வர்த்தக சம்மேளன வலையமைப்பின் உச்ச அமைப்பாகும் (Apex body). இது இலங்கை வர்த்தக சமூகத்தின் ஒருங்கிணைந்த குரலாக செயற்பட்டு, அனைத்து மாகாணங்களிலும் பொருளாதார வளர்ச்சி, கொள்கை ரீதியான பரிந்துரைகள் மற்றும் தொழில்முயற்சி மேம்பாட்டை உந்தித் தள்ளுகிறது.



























