Sep 8, 2026 - 03:25 PM

மணிப்பூரை சேர்ந்த 55 வயது விக்ரம் சிங், கடந்த 17 ஆண்டுகளாக டெல்லியில் தங்கித் இசை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.
தென்கிழக்கு டெல்லியின் கிலோகரி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 3 ஆவது தளத்தில் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தார்.
கடந்த 06 ஆம் திகதி இரவு 11:30 மணியளவில் குப்பைகளை கொட்டுவதற்காக விக்ரம் சிங் வீட்டின் 3 ஆவது மாடிக்கு கீழே இறங்கியுள்ளார்.
அப்போது அருகில் உள்ள தாபா உணவகங்களில் பணியாற்றும் சிலர் அவர் குடியிருக்கும் கட்டிடத்தின் வெளியே உரக்கச் சத்தமிட்டு குடியிருப்புவாசிகளுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தனர்.
அவர்களின் இந்த செயலை விக்ரம் சிங் தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் அவருடன் தகராறில் ஈடுபட்டது.
அவர்கள் தாக்க முயன்றதால் பயந்துபோன விக்ரம் சிங் தனது வீட்டை நோக்கி ஓடியபோது, அக்கும்பல் அவரை 3 ஆவது மாடி வரை துரத்திச் சென்று, காரிடாரில் வைத்து சரமாரியாக தாக்கிவிட்டுத் தப்பியோடியது.
காயமடைந்த விக்ரம் சிங்கை அவருடைய குடும்பத்தினர் ஓக்லாவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (07) காலை 7 மணியளவில் அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த பொலிஸார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்ட பரத் குமார் (19), பிரமோத் (26), ரம்ஜான் கான் (22), விஜய் (36), தீபன்ஷு (21), மோகன் விஸ்வகர்மா (32), மன்னு (26) ஆகிய 7 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களுடன் ஒரு 15 வயது சிறுவனும் பிடிபட்டுள்ளான்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரியும் டெல்லியில் வாழும் நூற்றுக்கணக்கான வடகிழக்கு மாநில மக்கள் கிலோகரி பகுதியில் நேற்று மெழுகுவர்த்தி ஏந்திப் போராட்டம் நடத்தினர்.



























