Sep 8, 2026 - 03:13 PM

இந்த ஆண்டிற்குள் பல அதிவேக நெடுஞ்சாலைகளின் பணிகள் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (08) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இதன்படி, இந்த ஆண்டின் நவம்பர் - டிசம்பர் ஆகிய இரு மாதங்களுக்குள் குருநாகலையிலிருந்து தம்புள்ளை வரையிலான அதிவேக நெடுஞ்சாலையின் குருநாகல் - கலேவெல பகுதிக்கான பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அதேபோல், கஹதுடுவையிலிருந்து இங்கிரிய வரையிலான அதிவேக நெடுஞ்சாலையின் பணிகள் இந்த ஆண்டின் இறுதியில் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கட்டுநாயக்கவிலிருந்து சிலாபம் வரையிலான அதிவேக நெடுஞ்சாலையின் பணிகள் தொடர்பில் திட்டங்களை தயாரிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
மேலும், அனுராதபுரத்தை மையமாகக் கொண்ட அதிவேக நெடுஞ்சாலை அமைப்பு தொடர்பில் ஆய்வு செய்வதற்கும் ஒரு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடவத்தையிலிருந்து மீரிகமை வரையிலான அதிவேக நெடுஞ்சாலையின் பணிகள் 2028 ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் நிறைவு செய்யப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பொதுஹெரவிலிருந்து ரம்புக்கனை வரையிலான பகுதி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.



























