Sep 9, 2026 - 07:17 AM

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற நான்கு வீதி விபத்துகளில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மற்றும் இரு இளைஞர்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (08) கெப்பெட்டிபொல, கொஸ்லந்த, கொடவில மற்றும் மாத்தறை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இந்த விபத்துகள் இடம்பெற்றுள்ளன.
கெப்பெட்டிபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா - பதுளை வீதியின் அளகொலகால பகுதியில், நுவரெலியா திசையை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, பாதையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியில் பயணித்த நபர் வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் நுவரெலியா பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞராவார்.
இதேவேளை, கொஸ்லந்த - வெல்லவாய வீதியின் உடுமுல்ல பகுதியில் வெல்லவாய திசையை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிர்திசையில் வந்த டிப்பர் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைகிள் செலுத்துனர் கொஸ்லந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் அல்தும்முல்ல பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய, கொஸ்லந்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவராவார்.
அத்துடன், கொட்டவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுல்தானாகொட வீதியில், சுல்தானாகொட திசையை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் படுகாயமடைந்த சாரதி மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சுல்தானாகொட பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய நபராவார்.
இதேவேளை, மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாத்தறை - அக்குரஸ்ஸ வீதியில், கொட்டகம அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் மாத்தறை திசையை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முயன்றபோது, எதிர்திசையில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.
இதன்போது தூக்கி வீசப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பேருந்தின் சக்கரங்களில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மற்றைய மோட்டார் சைகிள் செலுத்துனர் காயமடைந்து மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் பிட்டபெத்தர பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞராவார்.



























