Sep 9, 2026 - 01:59 PM

இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறை (SME) துறைக்கு ஆதரவளிப்பதற்கும் தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதற்குமான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், செலான் வங்கி சமீபத்தில் காலி மற்றும் மாத்தறையில் உள்ள சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்காக SME Scale-up அமர்வுத் தொடரை நடத்தியது. இந்த முயற்சி, தென் மாகாணத்தைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட தேயிலை பயிர்ச்செய்கையாளர்களை ஒன்றிணைத்ததுடன் அவர்களுக்கு மதிப்புமிக்க நுண்ணறிவு, தொழில்நுட்ப அறிவு ஆகியவற்றுடன் அவர்களின் வணிகங்களை வலுப்படுத்தவும் விரிவுபடுத்தவும் வடிவமைக்கப்பட்ட நிதி மற்றும் டிஜிட்டல் தீர்வுகளுக்கான அணுகலை வழங்குகிறது.
காலி மற்றும் மாத்தறையில் நடைபெற்ற இந்த அமர்வுகள், சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரதான சவால்களான அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகள், தொழிலாளர் பற்றாக்குறை, காலநிலை தொடர்பான இடர்கள் மற்றும் உற்பத்தித்திறன் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளிட்ட முக்கிய விடயங்களில் கவனம் செலுத்தியது. செலான் வங்கியினால் வழங்கப்படும் நிதி மற்றும் டிஜிட்டல் வங்கியியல் தீர்வுகளை பயன்படுத்தி நெறிப்படுத்தப்பட்ட செயல்பாடுகள் ஊடாக எவ்வாறு நீண்ட கால வியாபார வளர்ச்சியை முன்னெடுப்பது என்பது குறித்தும் பங்கேற்பாளர்கள் அறிந்துகொண்டனர்.
SME துறைக்கு கடன் வழங்கும் இலங்கையின் முதல் ஐந்து வழங்குனர்களில் ஒன்றாக, செலான் வங்கி, தொழில்முயற்சியாளர்கள் மற்றும் விவசாய வணிகங்களைத் தகுந்த நிதி மற்றும் ஆலோசனைத் தீர்வுகள் மூலம் வலுவூட்டுவதில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது. தொழிற்பாட்டு மூலதன வசதிகள், பண்ணை நவீனமயமாக்கலுக்கான முதலீட்டு நிதியுதவி, காசுப்பாய்ச்சல் அழுத்தங்களை எளிதாக்குவதற்கான மறுநிதியளிப்பு தீர்வுகள் மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தும் டிஜிட்டல் வங்கிக் கருவிகள் உட்பட, சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் மற்றும் விவசாய வணிகங்களுக்கான விரிவான சேவைகளை வங்கி வழங்குகிறது. இந் நிதித் தீர்வுகளுடன், தற்போதைய ஆலோசனை ஆதரவு மற்றும் அறிவுப் பகிர்வு முன்முயற்சிகளையும் இணைத்து நாட்டின் ஏற்றுமதிப் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் அதே வேளையில், சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், தொழில்துறை சவால்களுக்கு முகங்கொடுக்கவும், அவர்களின் வணிகங்களை முன்னேற்றவும் செலான் வங்கி உறுதிபூண்டுள்ளது.
காலியில் கலந்து கொண்டு உரையாற்றிய காலி, உதவி தேயிலை ஆணையாளர் L.K.அஜித், உரச் செலவுகள் மற்றும் தொழிலாளர் பற்றாக்குறையால் பயிர்ச்செய்கையாளர்கள் மீது அதிகரித்து வரும் அழுத்தத்தை சுட்டிக் காட்டினார். அவர், இச் சவால்களை முறியடிக்க தொழில்துறையின் அனைத்துத் தரப்பினரின் கூட்டு நடவடிக்கை தேவை என வலியுறுத்தியதுடன் பயிர்ச்செய்கை உற்பத்தியை மேம்படுத்துவதிலும், இத்துறையை வலுப்படுத்துவதிலும் பயிர்ச்செய்கையாளர்களுக்கு தேயிலை சபையின் தொடர்ச்சியான ஆதரவு இருக்கும் என்று உறுதியளித்தார்.
காலி, தேயிலை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் அபிவிருத்தி அதிகார சபையின் பிராந்திய முகாமையாளர் இந்திக மொஹொட்டி, பெறுமதியான நில வளங்களை அரிப்பிலிருந்து பாதுகாக்கும் அதே வேளையில், பரிந்துரைக்கப்பட்ட விவசாய நடைமுறைகள் மற்றும் பயிர்ச்செய்கை வழிகாட்டல்களைப் பின்பற்றி அதிக விளைச்சல் பெற வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அதேவேளை, இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் கொட்டாவ உப அலுவலகத்தின் பொறுப்பதிகாரி பிரதீப் டி அல்விஸ், தேயிலை பயிர்ச்செய்கையில் மாறிவரும் காலநிலை நிலைமைகளின் தாக்கம், குறிப்பாக எதிர்பார்க்கப்படும் எல் நினோ நிகழ்வின் சாத்தியமான விளைவுகள் குறித்து உரையாற்றினார். அவர், பல்வேறு தட்பவெப்ப நிலைகளைத் தாங்கி உற்பத்தித்திறனைப் பேணுவதற்காக உருவாக்கப்பட்ட தேயிலை செடி வகைகளை பயிர்ச்செய்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
மாத்தறை அமர்வில், மாத்தறைக்கான உதவி தேயிலை ஆணையாளர் W.M.S.J. விஜேமான்ன, இலங்கையின் தேயிலை தொழிற்துறையானது உலகளாவிய சந்தைகளில் போட்டித்தன்மையுடன் இருப்பதற்காக தொடர்ச்சியாக புதுமைகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். தேயிலை உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகள் பின்பற்றும் வெற்றிகரமான நடைமுறைகளைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், புதிய தொழில்நுட்பங்களைத் தழுவுவதன் முக்கியத்துவத்தையும், துறையின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான கூட்டுத் தொழில் நடவடிக்கைகளையும் எடுத்துரைத்தார்.
மேலதிக தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்கிய, தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வுபெற்ற ஆலோசனை அதிகாரி சாந்த ஜயசிங்க, அதிக அடர்த்தி கொண்ட பயிர்ச்செய்கை முறைகள் மற்றும் தேயிலை அரும்பு வளர்ச்சியைத் தூண்டுவதற்காக உருவாக்கப்பட்ட மேம்பட்ட உரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் தோட்ட உற்பத்தியை அதிகரிக்கும் உத்திகள் பற்றி கலந்துரையாடினார். மாறிவரும் வானிலை முறைகளுக்கு முகங்கொடுத்து, நீர் செயல்திறனை மேம்படுத்துவதற்கும், பயிர்களின் தாங்கும் திறனை வலுப்படுத்துவதற்கும் பயனுள்ள தீர்வாக சொட்டு நீர்ப்பாசன முறைகளை பின்பற்றுவதையும் அவர் ஊக்குவித்தார்.
அமர்வுகளின் முக்கியத்துவதைப் பற்றி செலான் வங்கியின் கிளைக் கடன் உதவிப் பொது முகாமையாளர் செசில்டன் பிலிப் பேசுகையில், “சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் இலங்கையின் விவசாயப் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றுகின்றனர். அன்புடன் அரவணைக்கும் வங்கியாக, அவர்களை ஊக்கமளிப்பது, நிதி உதவி வழங்குவதும் அவர்களின் வெற்றிகரமான ஏற்றுமதிக்கு வழிவகுக்கிறது. செலான் வங்கியில், எங்கள் வாடிக்கையாளர்களின் நிலையான வளர்ச்சிக்கு தேவையான அறிவு மற்றும் ஆலோசனை ஆதரவுடன், தொழிற்பாட்டு மூலதன வசதிகள், மறுநிதியளிப்பு தெரிவுகள், முதலீட்டு நிதியளித்தல் மற்றும் டிஜிட்டல் வங்கிச் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு நிதித் தீர்வுகளை வழங்குவதன் மூலம் அவர்களுடன் இணைந்து நிற்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். SME Scale-up அமர்வுகள் போன்ற முன்முயற்சிகள் மூலம், தொழில்துறை சவால்களை சமாளிக்கவும், உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், நாட்டின் நீண்ட கால பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் உறுதியான வணிகங்களை உருவாக்கவும் தொழில்முனைவோரை நிபுணத்துவம், வளங்கள் மற்றும் நம்பிக்கையுடன் தயார்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். என்றார்.
செலான் வங்கி, SME Scale-up அமர்வுகள் போன்ற முன்முயற்சிகள் ஊடாக இலங்கையின் SME துறைக்கு அறிவு, நிதியுதவி மற்றும் டிஜிட்டல் தீர்வுகளை வழங்குவதன் மூலம் வணிகங்கள் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், புதிய வாய்ப்புகளை அணுகவும், தேசிய செழிப்புக்கு பங்களிக்கவும் உதவுவதற்கான தனது அர்ப்பணிப்பை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது.



























