Sep 11, 2026 - 07:41 AM

தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிரிசங்கபோ மாவத்தை பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (11) அதிகாலை 3.15 மணியளவில் இனந்தெரியாத நபர் ஒருவரால் கைக்கூண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இத்தாக்குதலில் பலத்த காயமடைந்த 55 வயதுடைய நபர் ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இரு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் 11 மற்றும் 17 வயதுடைய இரண்டு ஆண் பிள்ளைகள் என பொலிஸ் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
காயமடைந்தவர் உயிரிழந்த இரு பிள்ளைகளின் தந்தையான 55 வயதுடைய நபராவார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய தாக்குதலுக்கான காரணம் அல்லது சந்தேகநபர்கள் குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.





























