Sep 11, 2026 - 10:19 AM

கொட்டகலை, டன்சினன் பகுதியில் உள்ள குறிஞ்சித் தமிழ் வித்தியாலயம் பூட்டப்பட்ட நிலையில், அதனை உடனடியாக மீளத் திறக்கக் கோரி பெற்றோர்களும் மாணவர்களும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட டிட்வா புயலின் தாக்கத்தின்போது, பாடசாலை அமைந்துள்ள டன்சினன் கீழ்ப்பிரிவுப் பகுதியில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன.
இதன் காரணமாக, குறித்த பாடசாலையிலும் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
எனினும், பின்னர் மக்கள் தங்களது சொந்த வீடுகளுக்கு மீளத் திரும்பியதைத் தொடர்ந்து, பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளும் மீள ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், ஆகஸ்ட் மாத பாடசாலை விடுமுறை நிறைவடைந்த பின்னரும் குறிஞ்சித் தமிழ் வித்தியாலயம் மீளத் திறக்கப்படவில்லை எனப் பெற்றோர்களும், மாணவர்களும் தெரிவிக்கின்றனர்.
தற்போது பாடசாலை அமைந்துள்ள பகுதியிலோ அல்லது கிராமத்திலோ குறிப்பிடத்தக்க பாதிப்புகள் எதுவும் இல்லாத நிலையில், பாடசாலை தொடர்ந்தும் மூடப்பட்டிருப்பது மாணவர்களின் கல்வியைப் பாதிப்பதாகப் பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பல கல்வியாளர்களையும் சமூகத்தின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களையும் உருவாக்கிய இந்தப் பாடசாலையை மீண்டும் திறந்து, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைத் தடையின்றி முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெற்றோர் மற்றும் மாணவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் இந்த விடயத்தில் உடனடி கவனம் செலுத்தி, டன்சினன் குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.





























