Sep 11, 2026 - 03:12 PM

தேசிய கடன் உத்தரவாதத் திட்டத்தின் (National Credit Guarantee Scheme) கீழ் பங்குபெறும் அனைத்து நிதி நிறுவனங்களுக்குள்ளும் அதிகளவிலான மொத்தக் கடன் தொகையை விநியோகித்துள்ள கொமர்ஷல் வங்கியானது, இத்திட்டத்தின் கீழ் தனது சந்தை முன்னிலையை மீண்டும் நிரூபித்துள்ளது.
இத்திட்டத்திற்கான கொமர்ஷல் வங்கியின் பிரதான மற்றும் பெறுமதிமிக்க பங்களிப்பைப் பாராட்டும் வகையில், வரையறுக்கப்பட்ட தேசிய கடன் உத்தரவாத நிறுவனம் (NCGIL) தனது 2,000 ஆவது கடன் உத்தரவாதத்தை கொமர்ஷல் வங்கிக்கு வழங்கிக் கௌரவப்படுத்தியது. தேசியக் கட்டமைப்பில், கொமர்ஷல் வங்கியின் பங்களிப்பானது நாடு தழுவிய ரீதியில் நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு (MSMEs) விரிவான ஆதரவு வழங்குவதையும் உள்ளடக்கியுள்ளது. இதில் NCGIL இனால் அறிமுகப்படுத்தப்பட்ட லிய சக்தி திட்டத்தினூடாக பெண்கள் வழிநடத்தும் வணிகங்கள் மீதான விசேட பங்களிப்பும் அடங்கும். தேசிய கடன் உத்தரவாதத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட அனைத்து கடன் வசதிகளிலும் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை, அதாவது சுமார் 600 உத்தரவாதங்களைக் கொண்டுள்ள கொமர்ஷல் வங்கி, மொத்தம் 2.97 பில்லியன் ரூபாய் பெறுமதியான கடன்களை விநியோகித்துள்ளது. இது நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை ஆதரிப்பதில் வங்கியின் தலைமைத்துவத்தை மேலும் பிரதிபலிக்கின்றது.
இந்த வரலாற்று மைல்கல் குறித்து கருத்துத் தெரிவித்த கொமர்ஷல் வங்கியின் தனிநபர் வங்கிப் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் திரு. எஸ். கணேசன், மிகக் குறுகிய காலத்திற்குள் இந்த மைல்கல்லை எட்டியமையானது தேசியக் கட்டமைப்பின் வலிமையையும், இலங்கை முழுவதிலும் உள்ள தொழில்முனைவோரின் மீளெழுச்சித் திறன் மற்றும் ஆற்றல்களையும் வெளிப்படுத்துகிறது. ஒரு வங்கி என்ற ரீதியில், பாரம்பரிய கடன் வழங்கும் முறைகளுக்கு அப்பால் சென்று, புதுமையான கூட்டாண்மைகள் மற்றும் பிரத்தியேகமான தீர்வுகள் மூலம் நிதி ஆதாரங்களுக்கான அணுகலை விரிவுபடுத்துவதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம். எமது கவனம் வெறும் மூலதனத்தை வழங்குவதில் மாத்திரமன்றி, ஆலோசனை வழிகாட்டல்கள், ஆற்றல் மேம்பாடு மற்றும் நீடித்த பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் நிதியியல் உள்ளடக்கல் முயற்சிகள் ஆகியவற்றின் ஊடாக சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளின் (SMEs) நிலையான வளர்ச்சியை உறுதிசெய்வதிலும் அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.
செயற்திறன் மிக்க வணிக மாதிரிகள் மற்றும் சிறந்த முறையில் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனைக் கொண்டிருந்தும், வழக்கமான வங்கி நடைமுறைகளுக்குத் தேவையான பிணையங்கள் இல்லாத தொழில்முனைவோருக்கான நிதி அணுகலை விரிவுபடுத்துவதற்காக NCGIL இனால் தேசிய கடன் உத்தரவாதத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பகுதிக் கடன் உத்தரவாதங்களின் ஆதரவுடன் இயங்கும் இத்திட்டம், பங்குபெறும் நிதி நிறுவனங்கள் பிணையற்ற கடன்களை வழங்குவதற்கு வழிவகுக்கிறது. அத்துடன், பெண் தொழில்முனைவோருக்கான லிய சக்தி போன்ற விசேட துணைத் திட்டங்கள் மூலமாக, தொழில்முயற்சி வளர்ச்சிக்கு நீண்டகாலமாக இருந்து வரும் பெரும் தடைகளில் ஒன்றிற்கு தீர்வினையும் வழங்குகின்றது.
NCGIL உடனான வங்கியின் இந்த கூட்டான்மையானது, நிதி அணுகலை விரிவுபடுத்தும் அதேவேளையில் இடர்களைக் குறைக்கும் புதுமையான கடன் கட்டமைப்புகள் மற்றும் மூலோபாய ஒத்துழைப்புகள் மூலம் இலங்கையின் அபிவிருத்தி வங்கிச் சேவையை வலுப்படுத்துவதற்கான விரிவான மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும்.
கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும், ஐக்கிய இராச்சியத்தின் மதிப்பிற்குரிய The Banker சஞ்சிகையால் வெளியிடப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்கான Top 1000 World Banks தரவரிசையில், முதலிடம் பெற்ற இலங்கையின் வங்கியாகவும் திகழ்கின்றது.
கொமர்ஷல் வங்கியானது, இலங்கை வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும் உள்ளது. Business Today இதழின் Top 40 தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக விருதுகளை வென்ற வங்கியாகவும் திகழ்கின்றது. மேலும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும்.
கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது.
மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.





























