Sep 12, 2026 - 07:03 AM

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் திட்டமிட்ட குற்றக் கும்பல்களினால் 6 குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
அவற்றில் மூன்று தாக்குதல்கள் கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக அண்மைக்காலமாக மேல் மாகாணத்தில் பாதாள உலகக் குழுக்கள் கைக்குண்டுகளைப் பயன்படுத்துவது தொடர்பாக பொலிஸார் தீவிர கவனம் செலுத்தியுள்ளனர்.
யுத்த காலத்தில் எல்.டி.டி.ஈ யிடமிருந்து பெறப்பட்ட கைக்குண்டுகளையே இவர்கள் இவ்வாறு பயன்படுத்துவதாக சந்தேகம் எழுந்துள்ளதுடன், அதற்கமைய எதிர்காலத்தில் குற்றங்களை அடக்குவதற்கான நடவடிக்கைகளில் முப்படையினரையும் இணைத்துக்கொள்வது குறித்து பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், தெஹிவளை சிரிசங்கபோ மாவத்தையிலுள்ள வீடொன்றின் மீது நேற்று (11) அதிகாலை நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரு சிறுவர்கள் உயிரிழந்ததுடன் அவர்களின் தந்தை காயமடைந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் 17 வயதான கசுன் ரஷ்மிக மற்றும் அவரது சகோதரரான 11 வயதான துமிந்த கிஹான் ஆகிய இரு சிறுவர்களாவர்.
தாக்குதலில் காயமடைந்த அவர்களின் தந்தையான 55 வயதான நலின் துசந்த பெரேரா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருக்கு எதிராக எந்தவொரு குற்றப் பின்னணியோ அல்லது குற்றச்சாட்டுகளோ இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
அடையாளம் தெரியாத நபரொருவர் தவறாகவே குறித்த வீட்டின் மீது இக்கைக்குண்டுத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேகநபர் குண்டுத் தாக்குதல் நடத்திய வீட்டின் கதவைத் தட்டியுள்ளதுடன், வீட்டிலிருந்தவர்கள் கதவைத் திறந்ததையடுத்து வீட்டிற்குள் குண்டை வீசியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த இரு சிறுவர்களும் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
எவ்வாறாயினும், அண்டை வீட்டில் அவர்களின் உறவினர்கள் சிலர் வசித்து வருவதுடன், அவர்கள் மீது போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் நிலவுவதாகவும், அவர்கள் வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள 'படோவிட்ட அஸங்க' எனும் குற்றவாளியின் நெருங்கிய சகாக்கள் எனத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதற்கமைய, குறித்த வீட்டையும் உயிரிழந்த சிறுவர்கள் வசித்து வந்த வீட்டையும் சரியாக அடையாளம் காண முடியாமல் இந்த கைக்குண்டுத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அண்மையில் களுபோவிலையிலுள்ள வீடொன்றின் மீது படோவிட்ட அஸங்கவின் தரப்பினரால் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்குப் பழிவாங்கும் வகையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக மூன்று பொலிஸ் குழுக்கள் மூலம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள பின்னணியில், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி பாதுக்கை - பஹல போபே பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





























