Sep 11, 2026 - 11:56 PM

இலங்கைச் சுங்கத் திணைக்களத்தினால் ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள "காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை" குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தும் விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (11) பிற்பகல் இந்த விசேட கலந்துரையாடல் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைச் சுங்கத் திணைக்களத்தால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை, அது தொடர்பான விழிப்புணர்வு திட்டங்கள் மற்றும் இலங்கைச் சுங்கத்தின் தொழில்நுட்ப தயார்நிலை குறித்து சுங்கத் திணைக்களம் மற்றும் வருமான நிர்வாக சீர்திருத்த அலகு என்பனவற்றினால் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு இங்கு விரிவான விளக்கமளிக்கப்பட்டது.
இலங்கைச் சுங்கத் திணைக்களம் மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் வருமான நிர்வாக சீர்திருத்த மற்றும் நவீனமயமாக்கல் பிரிவு இணைந்து இந்தச் செயற்பாட்டிற்காக வழங்கும் பங்களிப்பைச் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பாராட்டியதுடன், இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னோக்கி கொண்டு செல்வதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்கவும் உடன்பாடு தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி அலுவலகத்தின் வருமான நிர்வாக சீர்திருத்த மற்றும் நவீனமயமாக்கல் பிரிவின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சீவலி அருக்கொட, இலங்கை சுங்க பணிப்பாளர் நாயகம் விமல் லியனகம மற்றும் வருமான நிர்வாக சீர்திருத்த மற்றும் நவீனமயமாக்கல் பிரிவு மற்றும் இலங்கை சுங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும், சர்வதேச நாணய நிதியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி டினார் பிரிஹார்தினி (Dinar Prihardini) மற்றும் கிளாக்கோவ் அகேபன்னிட்சாவோர்ன் (Klakow Akepannidtaworn) ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.





























