Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான இலங்கையின் பேரிடர் மீட்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த, அவசரக்காலப் பொருட்களை UNFPA ஒப்படைத்தது

Sep 14, 2026 - 12:43 PM

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான இலங்கையின் பேரிடர் மீட்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த, அவசரக்காலப் பொருட்களை UNFPA ஒப்படைத்தது
Mobitel Inner 1278

அவசரநிலைகள் மற்றும் பேரிடர்களின் போது பெண்கள் மற்றும் சிறுமிகளின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் கண்ணியம் ஆகியவை பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில், பேரிடர் தயார்நிலையை வலுப்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA) இன்று 250,641 அமெரிக்க டொலர் பெறுமதியான அவசரகால நிவாரணப் பொருட்களை சுகாதார அமைச்சிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அரசாங்கங்களின் தாராளமான ஆதரவோடு இத்திட்டம் சாத்தியமானது. 

குடும்ப சுகாதார பணியகத்தில் நடைபெற்ற உத்தியோகபூர்வ கையளிப்பு நிகழ்வில், அரசு, மனிதாபிமான மற்றும் இராஜதந்திர தூதரகங்களின் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கௌரவ கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ; இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் பைன் (David Pine); இலங்கைக்கான ஆஸ்திரேலிய பிரதி உயர்ஸ்தானிகர் ரூத் பெயார்ட் (Ruth Baird); சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜெயசிங்க; சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி விந்தியா குமாரபெலி; குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம சிரிதுங்க; UNFPA இலங்கையின் இடைக்கால பிரதிநிதி புன்ட்சோ வங்ஷெல் (Phuntsho Wangyel) மற்றும் அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பிரதிநிதிகளும் அடங்குவர். 

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் தீவிர வானிலை உள்ளிட்ட பேரிடர்கள் இலங்கை முழுவதும் அடிக்கடி நிகழும் சூழலில், பெண்கள் மற்றும் சிறுமிகள் தொடர்ச்சியாகப் பெருமளவு பாதிப்புககளை எதிர்கொள்கின்றனர். உட்கட்டமைப்பு அழிவுகளுக்கு அப்பால், பேரிடர்கள் அத்தியாவசிய மகப்பேறு மருத்துவச் சேவைகளைப் பாதிப்பதுடன், அடிப்படை சுகாதாரப் பொருட்களைப் பெறுவதற்கான வாய்ப்புகளையும் துண்டித்து, பாலின அடிப்படையிலான வன்முறைக்கான அபாயத்தை அதிகரிக்கின்றன. இத்தகைய பாதிப்புகளை நேரடியாக எதிர்கொள்ளும் வகையில், இன்று கையளிக்கப்பட்ட அவசரகால பொருட்கள் களத்தில் உள்ள உடனடி உடலியல், மருத்துவ மற்றும் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

இந்த அவசரகால நிவாரணப் பொதியில் அடங்குபவை: 

● 08 உயர்தரக் கூடாரங்கள்: (தாய்மார் மற்றும் பெண்களின் பராமரிப்புக்கான அவசரநிலை பாதுகாப்பு இடங்களாகப் பயன்படுத்துவதற்காக, சூரிய சக்தியால் இயங்கும் மின்விளக்கு அமைப்புகளுடன் கூடிய 03 கூடாரங்கள் உட்பட). பலநோக்கு மற்றும் விரைவுப் பதிலளிப்புக்கான இந்த மனிதாபிமான தற்காலிக தங்குமிடங்கள், பேரிடர்கள் மற்றும் அவசரநிலைகளின் போது பெண்கள், கர்ப்பிணித் தாய்மார் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அத்தியாவசிய மகப்பேறு பராமரிப்பு, பாதுகாப்பு, பரிந்துரைகள், உளவியல்-சமூக மற்றும் வாழ்வாதார ஆதரவுகளைப் பெறுவதற்குப் பாதுகாப்பான, கண்ணியமான மற்றும் வசதியான தற்காலிக இடங்களை வழங்கி உதவுகின்றன. 

● குடும்ப சுகாதார சேவை அதிகாரிகளுக்கான 999 பயணப் பைகள் (Midwifery Go-Bags): உயிர்காக்கும் மகப்பேறு பராமரிப்பை வழங்குவதற்கு தேவையான கையடக்க அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை இவை கொண்டுள்ளன. 

● 1,283 கர்ப்பிணித் தாய்மார்களுக்கான பொதிகள் (Maternity Kits): பாதுகாப்பான பிரசவம் மற்றும் பச்சிளம் குழந்தையின் ஆரோக்கியத்திற்குத் தேவையான அத்தியாவசிய பராமரிப்புப் பொருட்களைப் பெற்றுக்கொடுக்கின்றன. 

● 246 முதியோருக்கான பொதிகள் (Elderly Kits): முதிய பெண்களின் குறிப்பிட்ட சுகாதார மற்றும் நடமாட்டத் தேவைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. 

● 1,659 சுகாதார பொதிகள் (Dignity Kits - பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான பொதி): இடம்பெயர்ந்த சூழல்களில் பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது மாதவிடாய் சுகாதாரத்தை நேர்த்தியாக நிர்வகிக்க உதவும் அத்தியாவசிய சுகாதாரப் பொருட்களைக் கொண்டுள்ளன. 

சுகாதார அமைச்சின் தலைமையின் கீழ், இந்தச் சிறப்பு வளங்கள் பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் உத்தியோகபூர்வமாக முன்-ஆயத்த நிலையில் (pre- positioned) சேமித்து வைக்கப்படும். தீவிர அவசரநிலையின் போது சேதமடைந்த வீதிகள் அல்லது சீர்குலைந்த உள்ளூர் உட்கட்டமைப்புகளால் ஏற்படும் கடுமையான போக்குவரத்து தாமதங்களைத் தவிர்ப்பதும், களத்தில் உள்ள முதன்மைப் பணியாளர்களின் கைகளில் உயிர்காக்கும் கருவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்வதுமே இந்தப் பொருட்களை முன்கூட்டியே இருப்பு வைப்பதன் நோக்கமாகும். 

தேசிய அவசரகால ஆயத்தநிலையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உரைநிகழ்த்திய சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ, ஒரு மீள்திறன் மிக்க சுகாதாரத் துறையை கட்டியெழுப்புவதற்கு பேரிடர்கள் தாக்குவதற்கு முன்பே முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதே அவசியமாகும். UNFPA மற்றும் ஆஸ்திரேலிய, நியூசிலாந்து அரசாங்கங்களுடனான கூட்டு முயற்சியானது எமது உள்ளூர் சுகாதாரப் பராமரிப்புத் திறனை மேம்படுத்த உதவியுள்ளதுடன், மிகக் கடுமையான அவசரநிலைகளின் போதும் தாய்-சேய் நலச் சேவைகள், பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச் சேவைகள் எவ்விதத் தடையுமின்றித் தொடர்வதை உறுதிசெய்கிறது, எனக் குறிப்பிட்டார். 

கூட்டு அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தி உரையாற்றிய இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மேதகு டேவிட் பைன் மேலும் கூறியதாவது: 

சரியான பேரிடர் முகாமைத்துவமானது தொலைநோக்குப் பார்வை மற்றும் ஒருங்கிணைப்பிலேயே தங்கியுள்ளது. இடப்பெயர்வு காலங்களில் கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் சிறுமிகள் போன்ற பாதிக்கப்படக்கூடிய பிரிவினர் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்து, அனைவரையும் உள்ளடக்கிய மீள்திறனை (inclusive resilience) கட்டியெழுப்ப இலங்கைக்கு உதவுவதில் எமக்கிருக்கும் அர்ப்பணிப்பையே நியூசிலாந்தின் இந்த ஆதரவு பிரதிபலிக்கிறது. 

பிராந்திய ஒற்றுமை மற்றும் மனிதாபிமான ஆதரவை வலியுறுத்தி உரையாற்றிய இலங்கைக்கான ஆஸ்திரேலிய பிரதி உயர்ஸ்தானிகர் ரூத் பெயார்ட், பேரிடர் தயார்நிலை மற்றும் அதற்கான எதிர்வினையாற்றும் கட்டமைப்புகளை, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் விரிவான வகையிலானதாக வலுப்படுத்துவதில் இலங்கையுடன் இணைந்து செயல்படுவதில் ஆஸ்திரேலியா பெருமிதம் கொள்கிறது. நெருக்கடி காலங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தைப் பாதுகாப்பது சமூகம் மீண்டு எழுவதற்கு இன்றியமையாததாகும். குறிப்பிட்ட தேவைகளை இலக்காகக் கொண்ட இந்த மனிதாபிமான உதவிகளை முன்கூட்டியே தயார் நிலையில் வைப்பதன் மூலம், உயிர்காக்கும் உதவிகள் மிகவும் தேவைப்படுபவர்களுக்கு, அந்தத் தேவை மிக அதிகமாக இருக்கும் தருணத்தில் விரைவாகச் சென்றடைவதை நாங்கள் உறுதி செய்கிறோம், எனத் தெரிவித்தார். 

பேரிடர் காலங்களில் பாதிப்புக்குள்ளாகும் சமூகங்களின் மாறிவரும் தேவைகள் குறித்துக் கருத்துத் தெரிவித்த UNFPA இலங்கையின் இடைக்கால பிரதிநிதி புன்ட்சோ வாங்யெல், 

நெருக்கடி காலங்களில், பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரப் பராமரிப்புத் தேவைகள் நின்றுவிடுவதில்லை; அதேபோல பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான எமது சமூகப் பொறுப்பும் முடிந்துவிடுவதில்லை. இத்தகைய வளங்களை பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கிடையில் முன்கூட்டியே தயார் நிலையில் வைப்பதன் மூலம், பேரிடர் ஏற்படும்போது களத்தில் உள்ள முன்னணிக் குழுக்கள் உடனடியாக உயிர்காக்கும் அவசரச் சேவைகளை வழங்க முடிவதுடன், மிகவும் பாதிப்புக்குள்ளாகும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் கண்ணியம், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பையும் உறுதிசெய்ய முடிகிறது, எனக் குறிப்பிட்டார். 

தனது சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து, காலநிலை மாற்றத்தை தாங்கக்கூடிய மீள்தன்மை கொண்ட, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் முழுமையாக ஆயத்தப்படுத்தப்பட்ட அவசரகால பதிலளிப்பு கட்டமைப்பை இலங்கை தழுவிக்கொள்வதற்கு ஆதரவளிப்பதில் UNFPA தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
22 ஐ நாங்களும் எதிர்க்கின்றோம்!

22 ஐ நாங்களும் எதிர்க்கின்றோம்!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

நல்லூர் கொடியிறக்கம்!

நல்லூர் கொடியிறக்கம்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

Mobitel 1278