Sep 16, 2026 - 06:22 PM

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் இராஜினாமா செய்த திருச்சி கிழக்கு உட்பட ஏழு தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளைத் தவிர்த்து மற்றத் தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள காரணத்தால், இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இந்தியத் தேர்தல் ஆணையம் இடைத் தேர்தலை அறிவித்துள்ளது.
அதன்படி வரும் அக்டோபர் 06 ஆம் திகதி தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 09 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், இன்று (16) பிற்பகல் 3 மணியோடு நிறைவடைந்தது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனை போட்டியாக இருந்த களம் தற்போது ஐந்து முனை போட்டியாக மாறியுள்ளது. அதன்படி, தவெக, திமுக, அதிமுக, நாதக மற்றும் இடதுசாரிகள் ஆகியவை களத்தில் உள்ளன.
இதில், மதுராந்தகம் தொகுதியில், பரந்தாமன் (திமுக), கனிதா சம்பத் (அதிமுக), மரகதம் குமரவேல் (தவெக), சுகந்தி (சிபிஎம்) மற்றும் ஜானகிராமன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதேபோல் தாராபுரம் தொகுதியில், சுகன்யா (திமுக), பானுமதி (அதிமுக), சத்தியபாமா (தவெக), லட்சுமணன் (சிபிஐ) மற்றும் கார்த்திகா ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில், நாளை (17) வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து வரும் 19 ஆம் திகதிக்குள் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை திரும்பப் பெறலாம். பின் வரும் அக்டோபர் 6 ஆம் திகதி வாக்குப் பதிவு நடைபெற்று, அக்டோபர் 9 ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.





























