Sep 18, 2026 - 07:22 AM

ஈரானின் ஆதரவு பெற்ற யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த உதவுமாறு சீனா, ஈரானிடம் ரகசியமாக கோரியுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
ஹூதிகள் கடந்த வாரம் மேற்கொண்ட தீவிர இராணுவ முன்னேற்றங்களைத் தொடர்ந்து, சவூதி அரேபியா முன்வைத்த கோரிக்கையின் பேரில் சீனா இவ்வாறு கோரியுள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.
செங்கடல் கடலோரப் பகுதிகள் மற்றும் பாப் எல்-மண்டேப் நீரிணையை சுற்றிலும் ஹூதிகள் வேகமான முன்னேற்றங்களை அடைந்ததைத் தொடர்ந்து, சவூதியின் எண்ணெய் ஏற்றுமதி மற்றும் கப்பல் போக்குவரத்து மேலும் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டது.
இதனையடுத்து சவூதி அரேபியா சீனாவின் உதவியை நாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவினால் நிதானம், பேச்சுவார்த்தை மற்றும் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை மீண்டும் ஏற்படுத்துமாறு ஈரானிடம் கோரியுள்ள போதிலும் அது தொடர்பான பகிரங்கமான அறிக்கைகள் எவையும் இதுவரை வௌியாகவில்லை.
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனா சார்ந்துள்ள எரிசக்திப் பாதைகளில் இந்த மோதல் மேலும் பரவாமல் தடுக்க, ஈரான் ஹூதிகளுடனான தனது செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.





























