Sep 18, 2026 - 12:05 PM

சில புகையிரத தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற போதிலும், வழமையான ரயில் சேவைக்கு அது பாரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினத்தை போலவே இன்றும் அனைத்துப் அலுவலக ரயில் சேவைகளையும் இயக்க முடிந்ததாக அத்திணைக்களத்தின் போக்குவரத்து அத்தியட்சகர் அஸங்க சமரசிங்க தெரிவித்தார்.
அதன்படி, அனைத்து மார்க்கங்களிலும் அலுவலக ரயில்கள் வழமை போல் இயக்கப்பட்டதாகவும், இது திட்டமிட்டபடி மாலை வேளையிலும் இயக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு வரை இயக்கப்படவுள்ள நகரங்களுக்கு இடையேயான புகையிரதம் இன்று மாலை திட்டமிட்டபடி கொழும்பு வரை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், காங்கேசன்துறை - கொழும்பு மற்றும் கொழும்பு - காங்கேசன்துறை இடையிலான இரவு தபால் ரயில்களையும் சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அனைத்து ரயில்களையும் இயக்குவதற்கு முன்னர் பயணிகளின் பாதுகாப்புக்கே அதிக கவனம் செலுத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கமைய, பதுளை - நானுஓயா இடையிலான ரயில் சேவைகள் இயக்கப்படவில்லை என்றும், அந்த ரயில் பாதையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை பணிப்புறக்கணிப்பு காரணமாக ஏதேனும் ரயில் நிலையம் மூடப்பட்டிருந்தால், www.pravesha.lk என்ற இணையதளத்திற்குச் சென்று தமது பயணத்திற்கான பயணச்சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.





























