Sep 21, 2026 - 01:53 PM

மட்டக்களப்பு, வாகனேரிப் பகுதியில் காட்டுயானை தாக்குதலில் 60 வயதுடைய விவசாயி ஒருவர் இன்று (21) உயிரிழந்தார். இதனையடுத்து, "இனியும் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன், யானை - மனித மோதலைத் தடுக்க உரிய தீர்வை வழங்கிட வேண்டும்" என வலியுறுத்தி அப்பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாகனேரிப் பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவராவார்.
சம்பவ தினமான இன்று காலையில் இவர் வீட்டிலிருந்து வயல் வேலைக்குச் சென்றபோதே காட்டுயானையின் தாக்குதலுக்கு இலக்காகி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகப் பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் மற்றும் மரண விசாரணை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டதுடன், உயிரிழந்தவரின் சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் ஒப்படைத்தனர்.
இதனிடையே, இப்பகுதியில் தொடர்ச்சியாகக் காட்டுயானைகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாகவும், இது தொடர்பாக வனவிலங்கு அதிகாரிகளுக்குப் பலமுறை முறைப்பாடு செய்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாகச் செயல்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
சம்பவம் நடந்த இடத்தில் ஒன்றுதிரண்ட கிராம மக்கள், "இன்னொரு உயிரை இழக்க நாங்கள் தயாராக இல்லை, எனவே உடனடியாகத் தீர்வைப் பெற்றுத்தர வேண்டும்" எனக் கோரினர்.
மேலும், "எங்கள் மக்களின் உயிரைப் பொருட்டாக எண்ணாத அரசாங்கமும் அதிகாரிகளும் இதுவரை யானை வேலியை அமைக்கவில்லை. தொடர்ந்து மக்களின் உயிரைக் குடிக்கும் காட்டுயானை அச்சுறுத்தலுக்குத் தீர்வாக, எமது வாகனேரி கிராமத்திற்கு உடனடியாக யானை வேலி அமைத்துத் தர வேண்டும்" போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு சுமார் ஒரு மணி நேரம் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பின்னரே கலைந்து சென்றனர்.





























