Sep 28, 2026 - 01:05 PM

ஜெயிலர் 2 திரைப்படம் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒன்று. இந்த நிலையில், இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற வேண்டும் என்றால், இத்தனை கோடிகள் வசூல் செய்ய வேண்டும் என விவரம் வெளியாகியுள்ளது, அதைப்பற்றி விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட திரைப்படங்களை தயாரித்து வெளியிடும் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று சன் பிக்சர்ஸ். கடந்த 2023 ஆம் ஆண்டு இவர்களது தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வெளிவந்து இண்டஸ்ட்ரி ஹிட்டான திரைப்படம் ஜெயிலர். முதல் பாகத்தின் மாபெரும் வெற்றிக்கு பின், 3 ஆண்டுகள் கழித்து வருகிற அக்டோபர் 15 ஆம் திகதி ஜெயிலர் 2 திரைக்கு வரவிருக்கிறது.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், சுராஜ், சிவராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும், பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் இப்படத்தில் சர்ப்ரைஸ் கேமியோ ரோலில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. நாம் எதிர்பார்க்கவே முடியாத இன்னும் பல கேமியோக்கள் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளிவரும்போது, அப்படத்தின் பிசினஸ் எவ்வளவு நடந்துள்ளது, பிரேக் ஈவன் (Break-even) எவ்வளவு வந்தால் படம் நஷ்டத்தில் இருந்து தப்பித்து, பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறும் என்கிற தகவல்கள் எல்லாம் திரை வட்டாரத்தில் பேசப்படும். அந்த வகையில், ஜெயிலர் 2 திரைப்படத்தின் ப்ரீ பிசினஸ் மற்றும் பிரேக் ஈவன் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் கிட்டத்தட்ட 325 கோடி ரூபாவுக்கு ப்ரீ பிசினஸ் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் பிரேக் ஈவன் ஆக வேண்டும் என்றால் இப்படம் 650 கோடி ரூபா கண்டிப்பாக வசூல் செய்ய வேண்டும். அப்படி நடந்தால் தான் நஷ்டத்தில் இருந்து தப்பிக்க முடியும்.
பிரேக் ஈவன் குறித்து ஒரு பக்கம் பேசப்பட்டு வந்தாலும், பல வருடங்களாக தமிழ் சினிமாவிற்கு 1,000 கோடி ரூபா வசூல் திரைப்படம் கிடைக்கவில்லை என்கிற ஏக்கம் அனைவரின் மத்தியிலும் இருந்துகொண்டே இருக்கிறது. இதை தீர்க்க வந்துள்ள திரைப்படம்தான் ஜெயிலர் 2 என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் கண்டிப்பாக தமிழ் சினிமாவின் முதல் 1,000 கோடி ரூபா வசூல் திரைப்படமாக அமையும் என்கின்றனர்.































